Published : 16 Aug 2023 04:05 AM
Last Updated : 16 Aug 2023 04:05 AM
திருச்சி: மகனுக்கு அரசு வேலை, குடியிருக்க வீடு கட்டித் தர வேண்டும் எனக் கோரி மணப்பாறையில் 96 வயது சுதந்திர போராட்ட தியாகி நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
திருச்சி மாவட்டம் மணப்பாறையைச் சேர்ந்தவர் சுந்தரம் (96). சுதந்திரப் போராட்ட தியாகியான இவரது ஒரே மகன் கூலி வேலை செய்து வருகிறார். இவரது குடும்பம் வறுமையில் வாடிக் கொண்டிருக்கிறது. மணப்பாறை நகரில் சேது ரத்தினபுரத்தில் தனக்கு சொந்தமான மிகவும் பழமையான ஓட்டு வீட்டில் சுந்தரம் வசித்து வருகிறார். அந்த வீடும் சேதமடைந்துள்ளது.
‘தனது மகனுக்கு அரசு வேலை வழங்க வேண்டும். தனது சேதமடைந்த வீட்டை அரசு செலவில் கட்டிக் கொடுக்க வேண்டும் என சுந்தரம் கடந்த சில ஆண்டுகளாக அரசு அதிகாரிகள், தமிழக முதல்வர் ஆகியோருக்கு ஏராளமான கோரிக்கை மனுக்கள் அளித்துள்ளார். ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில், சுதந்திர தினமான நேற்று காலை தனது கோரிக்கைகளை வலியுறுத்தி மணப்பாறையில் உள்ள காமராஜர் சிலை முன்பு கோரிக்கை அட்டைகளுடன் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். தகவலறிந்த மணப்பாறை போலீஸார் மற்றும் வருவாய்த் துறையினர் அங்கு சென்று சுதந்திர போராட்ட தியாகி சுந்தரத்திடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அவரது கோரிக்கைகளை அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்து, அவரை ஒரு ஆட்டோவில் ஏற்றி வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். சுதந்திர தினத்தன்று சுதந்திர போராட்ட தியாகி ஒருவர் தர்ணாவில் ஈடுபட்டது மணப்பாறை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT