

கார்ட்டூன் வரைந்ததற்காக தலைமறைவாக வாழ முடியாது.. ஓட முடியாது.. இனி ஜாமீன் வாங்கவும் விருப்பமில்லை.. என தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கார்ட்டூனிஸ்ட் பாலா தெரிவித்துள்ளார்.
முன்னதாக, இம்மாத தொடக்கத்தில் கந்து வட்டிக் கொடுமையால் திருநெல்வேலியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தீயில் கருகி உயிரிழந்த சம்பவத்தை மையப்படுத்தி, கேலிச்சித்திரம் வரைந்ததற்காக கார்ட்டூனிஸ்ட் பாலா கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில், நேற்று (செவ்வாய்க்கிழமை) மீண்டும் அவர் மேல் போலீஸார் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளனர்.
இது குறித்து கார்ட்டூனிஸ்ட் பாலா தனது ஃபேஸ்புக் பக்கத்தில், "கைது செய்யப்பட்டதால் வீட்டில் அம்மா மனைவி குழந்தைகளுக்கு ஏற்பட்ட மன உளைச்சலை இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றிக்கொண்டு வந்தேன்..
இரண்டாவதாக ஒரு எப்.ஐ.ஆரை போட்டு மறுபடியும் முதல்ல இருந்து ஆரம்பித்து வைத்திருக்கிறது எடப்பாடி பழனிசாமி போலீஸ்..
சலிப்பா இருக்கு..
கார்ட்டூன் வரைந்ததற்காக தலைமறைவாக வாழ முடியாது.. ஓட முடியாது.. இனி ஜாமீன் வாங்கவும் விருப்பமில்லை..
என்னை சிறையில் அடைச்சு வைக்கணும் என்பதுதான் ஆசை என்றால் அதை செய்து கொள்ளுங்கள்..
ஆனா வெளியே வந்ததும் அதுக்கும் சேர்த்து கார்ட்டூன் போடுவேன்.." எனத் தெரிவித்திருக்கிறார்.