Published : 04 Nov 2017 08:54 PM
Last Updated : 04 Nov 2017 08:54 PM

தமிழகத்தில் ஒரு நதியையே காணவில்லை; விரைவில் உண்மைகள் வெளிவரும்: கமல்ஹாசன் பேச்சு

முன்னேற்றம் என்ற பெயரில் இயற்கையை சூறையாடுவதை அனுமதிக்க முடியாது. ஹைட்ரோ கார்பன் விலை நிலத்தில் கிடைக்கிறது என்பதற்காக அதை சாப்பிட்டு உயிர் வாழ முடியுமா? என்று கேள்வி எழுப்பிய கமல்ஹாசன் ஒரு ஆற்றையே அதிகாரிகள் காணாமல் செய்துவிட்டார்கள் விரைவில் அது பற்றி உண்மைகளை வெளியிடுவேன் என்று தெரிவித்துள்ளார்.

இன்று சென்னை அடையாரில் நடைபெற்ற தமிழக விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய கமல்ஹாசன் பேசியதாவது:

தங்கம் வைரம் வயலில் கிடைக்கிறது என்பதற்காக அதை பொடி செய்து சாப்பிட முடியுமா என்று யோசித்துப் பாருங்கள். விவசாய நிலங்களை விஞ்ஞான வளர்ச்சி, முன்னேற்றம் என்ற பெயரில் அழிப்பதை வேடிக்கை பார்க்க முடியாது. ஆலைகள் வேண்டும் தான், ஆனால் அது வயலில் அமைக்கப்படக்கூடாது.

ஆலைகள் எங்கு அமைய வேண்டும் என்று முடிவு செய்ய வேண்டும்.

நான் இரண்டொரு நாளில் பேச உள்ளேன், அப்போது விரிவாகப் பேசுவேன்.குளங்களும் ஏரிகளும் நிரம்பி வழிகின்றன, குளங்களின் கொள்ளளவு எவ்வளவு என்று கேட்டால் யாருக்கும் தெரியவில்லை. ஆர்டிஐயிலும் தகவல் இல்லை. இது வேண்டுமென்றே மறைத்து வைக்கப்பட்டிருக்கிறது.

விளைநிலத்தில் புதிதாக வீடு கட்ட வேண்டும் என்றால் சோற்றுக்கு என்ன செய்வது? ஆகவே இதை அனுமதிக்க முடியாது. அனைத்தும் வந்தது விவசாயத்தால்தான். இது 7000 ஆண்டு சமாச்சாரம். பழைய கால தொழில் இன்றும் தேவைப்படுகிறது.

விளைநிலத்தில் ஹைட்ரோ கார்பன் கிடைக்கிறது என்பதற்காக அதை பொடி செய்து சாப்பிட முடியுமா? கடந்த ஐம்பது ஆண்டுகளாக நாம் தூங்கி விட்டோம், இனியாவது விழித்துக் கொள்வோம். குளங்கள், ஏரிகளை பராமரிப்பு செய்ய நிச்சயம் நாங்கள் உதவுவோம். என்னிடம் நான் வளர்த்த பிள்ளைகள் இருக்கிறார்கள் அவர்களை உங்களிடம் அனுப்பி வைக்கிறேன் அவர்கள் உங்களுக்கு உதவி செய்வார்கள்.

இன்று ஒரு ஆற்றையே காணவில்லை, அதிகாரிகள் எல்லாம் சேர்ந்து ஆற்றையே காணாமல் செய்து விட்டார்கள். என் நண்பர்கள் அதற்கான ஆதாரங்களைத் திரட்டி வருகிறார்கள். விரைவில் நான் உங்களிடம் பேசுவேன். கிணத்த காணோம் எனபது போல் ஒரு ஆறு இருக்கும் சுவடே இல்லாமல் செய்துள்ளார்கள்.

புராணங்களில் பாலம் கட்டுவதற்கு அணில் உதவியதைப்போல, உங்களுக்கு ஒரு ஜந்துவாக நானும் உதவ வந்துள்ளேன். விவசாயிகளுக்கு ஊக்கியாகவும், அலாரமாகவும் இருப்பேன். நான் கடவுள் நம்பிக்கை இல்லாதவன் தான். ஆனால் நீங்கள் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள்.

உங்களின் கடவுள் நம்பிக்கை பட்டியலில் இப்போது மழையையும், ஆறுகளையும் இணைத்துக் கொள்ளுங்கள். மழையையும், ஆறுகளையும் கும்பிடத் தொடங்குங்கள், அப்போதுதான் அது வாழும். இன்று பகுத்தறிவு பேசும் நானே பதறிப்போய் இதைச்சொல்லுகிறேன் என்றால் அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக இந்த விவகாரம் மாறிப் போயுள்ளது''

இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x