முதல்வர் ஸ்டாலின் மதுரைக்கு 3 நாள் பயணம்

முதல்வர் ஸ்டாலின் மதுரைக்கு 3 நாள் பயணம்
Updated on
1 min read

மதுரை: மதுரையில் பின்னணி பாடகர் பத்ம ஸ்ரீ டிஎம் சவுந்திரராஜன் சிலை திறப்புவிழா மற்றும் ராமநாதபுரம், மண்டபம் மீன்வர் மாநாட்டில் பங்கேற்கும் விதமாக 3 நாள் பயணமாக முதல்வர் முக.ஸ்டாலின் புதன்கிழமை (ஆக.,16) மாலை மதுரை வருகிறார்.

மதுரை முனிச்சாலை பகுதி தினமணி திரையரங்கு அருகில் பிரபல பின்னணி சினிமா பாடகர் டிஎம். சவுந்திரராஜனுக்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா புதன்கிழமை (ஆக.,16) இரவு சுமார் 7 மணியளவில் நடக்கிறது. இச்சிலையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். இதைத்தொடர்ந்து அவர் ஆக., 17ம் தேதி வியாழன் அன்று ராமநாதபுரத்தில் தென் மண்டல திமுக வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி முகாமிலும், 18ம் தேதி மண்டபத்தில் நடக்கும் மீனவர்கள் மாநாட்டிலும் பங்கேற்கிறார்.

இதையொட்டி 3 நாள் பயணமாக முதல்வர் ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் புதன்கிழமை மாலை மதுரை வருகிறார். சுமார் 7 மணிக்கு முனிச்சாலை பகுதியில் பாடகர் சவுந்திரராஜன் சிலையை திறந்து வைக்கிறார். இதன்பின், மதுரை ரிங்ரோட்டிலுள்ள தனியார் ஓட்டலில் தங்குகிறார். 17ம்தேதி காலையில் கார் மூலம் ராமநாதபுரம் புறப்பட்டுச் செல்கிறார். திமுக வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி முகாமில் பங்கேற்கிறார்.

இதன்பின், ராமேசுவரம் செல்லும் அவர், தனியார் ஓட்டல் ஒன்றில் தங்குகிறார். 18ம் தேதி மண்டபத்தில் நடக்கும் மீன்வர்கள் மாநாடு, அரசின் நலத்திட்டம் வழங்கும் விழாவில் பங்கேற்கிறார். மாநாடு முடிந்து மதுரை வரும் முதல்வர் விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.

முதல்வரின் வருகையொட்டி தென் மண்டல ஐஜி நரேந்திரன் நாயர் தலைமையில் மதுரை, ராமநாதபுரம், ராமேசுவரம் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in