என்எல்சி ஜீவா ஒப்பந்த தொழிலாளர்களின் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு

என்எல்சி ஜீவா ஒப்பந்த தொழிலாளர்களின் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு
Updated on
1 min read

கடலூர்: கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் அடிப்படையில், என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாக ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

நெய்வேலியில் உள்ள என்எல்சி இந்தியா நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளர்கள், இன்கோ சர்வ் சொசைட்டிதொழிலாளர்கள் உள்பட 10 ஆயிரத் துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இத்தொழிலாளர்களுக்கும் நிரந்தர தொழிலாளர்களுக்கும் இடையே ஊதிய முரண்பாடு உள்ளது. இதை சரி செய்யக்கோரி ஒப்பந்த தொழிலாளர்கள் அவ்வப்போது போராட்டங்களில் ஈடு பட்டு வருகின்றனர்.

இதற்கிடையே, என்எல்சி ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், பணி நிரந்தரம் செய்யும் வரை மாதம் ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும், வீடு, நிலம் கொடுத்தவர்களுக்கும் வேலை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 26-ம்தேதி முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இவர்களது போராட்டம் 20-வதுநாளாக நேற்று தொடர்ந்தது. இப்போராட்டத்தில் சங்கத்தலைவர் அந்தோணி செல்வராஜ், சிறப்புத் தலைவர் சேகர், பொதுச்செயலாளர் செல்வமணி உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்று வந்தனர். இந்த நிலையில் நேற்று காலை கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இதில், மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் மற்றும் என்எல்சி அதிகாரிகள், என்எல்சி ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்க நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். பேச்சுவார்த்தையில், வர இருக்கும் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை என்எல்சி நிர்வாகம் - ஒப்பந்த தொழிலாளர்கள் என இரு தரப்பிலும் ஏற்றுக் கொள்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் கடந்த 20 நாட்களாக போராட்டத்தில் பங்கேற்ற தொழிலாளர்கள் மீது நிர்வாகம் நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது என்று பேசி முடிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைப்பதாக என்எல்சி ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in