

நடிகர் கமல்ஹாசனின் ட்விட்டர் கருத்துகளை திமுக எம்.எல்.ஏ.வும், டி.ஆர். பாலுவின் மகனுமான டிஆர்பி ராஜா கிண்டல் செய்துள்ளார்.
நாட்டு நடப்புகள் குறித்து அவ்வப்போது நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்துகள் பகிர்ந்து வருகிறார். அவர் அரசியலுக்கு வரப்போகிறேன் என்று அறிவித்தபின், அவரது கருத்துகளுக்கான எதிர்வினைகள் அரசியல்வாதிகளிடமிருந்து வலுத்திருக்கிறது.
இந்நிலையில், அகில பாரதிய இந்து மகாசபா தலைவர் பண்டிட் அசோக் சர்மாவின் பேச்சு குறித்து கமல்ஹாசன் தனது பக்கத்தில் பதிவு செய்திருந்தார். மேலும் ஒரு வீடியோவைப் பதிவிடும் முன், "என் பிள்ளைகள். அய்யகோ! ஒரு பிள்ளை எனை குத்திச்சாவதே மேல். என் வளர்ந்த சகோதரன் குற்றவாளியாய் தமிழ் பேசிக் குற்றம் ஏற்பதை தமிழ்இனம் சகியாது. இயற்கை எனைக் கொன்றே மகிழும் . அதன் முன் மகிழ உமக்கும் உரிமை உண்டு. கொன்றுதான் பாரும். வென்றே தீர்வேன்" எனப் பதிவிட்டிருந்தார்.
தொடர்ந்து திமுக எம்.எல்.ஏ டிஆர்பி ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில், "கருத்து சொல்றதுன்னு முடிவாயிட்டா தெளிவா சொல்லுங்க. உங்களோட புலமைய மட்டும் வெளிப்படுத்தனும்னா புத்தகமா வெளியிடுங்க. இல்லனா கவி அரங்கம் நடத்துங்க. கட்சி நடத்தனும்னா, வாக்காளர்களை விடுங்க, முதல்ல உங்க கட்சில இருக்கனும்னு நினைக்கற கட்சிக்காரங்களுக்காவது நீங்க சொல்றது புரியனும்" என்று கமல்ஹாசனை கிண்டல் செய்யும் விதமாக பதிவு செய்துள்ளார்.
ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்களே பெரும்பாலும் கமல்ஹாசனை விமர்சித்துக் கொண்டிருக்க, தற்போது திமுகவைச் சேர்ந்த டிஆர்பி ராஜாவும் கமல்ஹாசனுக்கு எதிர்வினையாற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது.