Published : 15 Nov 2017 07:02 PM
Last Updated : 15 Nov 2017 07:02 PM

ஆளுநரை எதிர்த்தால் அதிகாரம் பறிபோய்விடும் என்று முதல்வர் பழனிசாமி அச்சப்படுகிறாரா?- திருமாவளவன்

ஆளுநரை எதிர்த்தால் தமது அதிகாரம் பறிபோய்விடும் என்று தமிழக முதல்வர் அச்சப்படுகிறாரா என விசிக தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழக ஆளுநர் நேற்று கோவையில் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளை அழைத்து ஆய்வுக் கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளார். அதிகார வரம்பை மீறிய அவரது இந்த நடவடிக்கை அதிர்ச்சியளிக்கிறது.

தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி பிறப்பிக்கப்பட்டுவிட்டதா அல்லது அதற்கான முன்னோட்டமா என்ற ஐயம் நமக்கு ஏற்பட்டுள்ளது. மாநில அரசின் நிர்வாகத்தில் தலையிடும் ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு தமிழக முதல்வர் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாமருத்துவமனையில் அனுமதிகப்பட்ட நாளிலிருந்தே மத்தியில் ஆளும் பாஜக அரசு தமிழ்நாட்டில் மறைமுகமாக ஆட்சி நடத்த முயற்சித்து வருகிறது. அதற்கு ஆளுநரைப் பயன்படுத்தப் பார்க்கிறது என்ற குற்றச்சாட்டை விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து முன்வைத்து வருகின்றன. பொறுப்பு ஆளுநராக பதவி வகித்த வித்யாசாகர் ராவ் ஒளிவுமறைவின்றி தனது அரசியல் சார்பு நிலையை வெளிக்காட்டி வந்தார். தற்போது முழுநேர ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கும் புரோஹித் பாஜகவின் பிரதிநிதியாக செயல்பட முனைகிறாரோ என்ற ஐயம் நமக்கு எழுகிறது.

ஆளுநருக்கு அரசியல் அமைப்புச் சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ள அதிகார வரம்புகளை மீறி மாநில அரசின் அதிகாரிகளை வைத்து ஆய்வுக் கூட்டம் நடத்துவதும் அரசின் திட்டங்கள் செயல்படுத்தபடுவதை நேரடியாக பார்வையிட்டு ஆய்வு செய்வதும் ஏற்புடையதல்ல.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இருக்கும் போது மாநில அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி ஆளுநரிடம் அளிக்கும் பரிந்துரைகளை மட்டுமே அவர் செயல்படுத்த முடியும். குடியரசுத் தலைவரின் ஆட்சியின் போது மட்டும் தான் நேரடியாக அவர் நிர்வாகத்தில் ஈடுபட முடியும். தமிழக ஆளுநரின் வரம்பு மீறிய இந்த செயல்பாடு அரசியல் சட்டத்துக்கு புறம்பானது மட்டுமின்றி வாக்களித்து இன்றைய அரசை தேர்ந்தெடுத்த குடிமக்களையும் அவமதிப்பதாக உள்ளது.

டெல்லி, புதுச்சேரி முதலான யூனியன் பிரதேசங்களிலும் கூட ஆளுநர் வரம்பு மீறி நடந்துகொண்டால் அந்த மாநிலங்களின் முதல்வர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர், அப்படி இருக்கும் போது பெரிய மாநிலங்களில் ஒன்றான தமிழகத்தில் ஆளுநருக்கு முதல்வர் எவ்வித அதிருப்தியையும் தெரிவிக்காமல் இருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

ஆளுநரை எதிர்த்தால் தமது அதிகாரம் பறிபோய்விடுமோ என்று தமிழக முதல்வர் அச்சப்படுகிறாரா எனத் தெரியவில்லை. தனது எதிர்ப்பை முதல்வர் தெரிவிக்காவிட்டால்தான் அவரது அதிகாரம் பறிபோகும் என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும். தனது எதிர்ப்பை காலம் தாழ்த்தாமல் உடனடியாக தெரிவிக்க வேண்டும்'' என்று திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x