

தூத்துக்குடி: “நீட் தேர்வை வைத்து முதல்வர் அரசியல் செய்ய வேண்டாம்” என, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேட்டுக் கொண்டுள்ளார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று மாலை 5 மணியளவில் திருச்செந்தூர் வீரபாண்டியன்பட்டினத்தில் தனது நடைபயணத்தை மேற்கொண்டார். அவருக்கு மக்கள் பூக்களைத் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். பலர் அவருடன் இணைந்து செல்பி எடுத்துக் கொண்டனர். பல்வேறு கோரிக்கை மனுக்களை அவரிடம் வழங்கினர்.
முன்னதாக திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சென்று அண்ணாமலை சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி: சாதாரண குடும்பத்தை சேர்ந்த மாணவர்கள் நீட் தேர்வின் மூலம் மருத்துவப் படிப்பில் சேர்ந்து வருகிறார்கள்.
அரசு பள்ளி மாணவர்கள் அதிகமானோர் தனியார் பள்ளி மாணவர்களுக்கு இணையாக நீட் தேர்வு எழுதி மருத்துவப் படிப்பில் சேர்ந்து வருகிறார்கள். நீட் தேர்வினால் தமிழகத்தில் மாணவனும் அவரது தந்தையும் உயிரை மாய்ந்துள்ளனர். இது அதிர்ச்சி அளிக்கிறது. ஆனால் அதை வைத்து அரசியல் செய்கிறார்கள்.
குறிப்பாக நீட் தேர்வை வைத்து முதல்வர் அரசியல் செய்ய வேண்டாம். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை. அரிவாள் வெட்டு, கவுன்சிலருக்கு வெட்டு என தினமும் பிரச்சினை எழுகிறது. கஞ்சாவை கட்டுப்படுத்தவில்லை. எல்லா நிலைகளிலும் திமுக அரசு தோல்வி அடைந்துவிட்டது.
தமிழக காவல் துறையின் கைகளை கட்டிப்போட்டுவிட்டு திமுகவினருக்கு சாதகமாக செயல்படச் சொன்னால் சட்டம் ஒழுங்கு எப்படி இருக்கும்? இதுவரை 29 தொகுதிகளில் பயணம் செய்துள்ளோம். மக்கள் எழுச்சியைக் காண முடிகிறது. தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி 40-க்கு 40 இடங்களை வெல்லும் என்பதை இந்த பாத யாத்திரை உறுதி செய்யும். இவ்வாறு அண்ணாமலை தெரிவித்தார்.