

திருப்பத்தூர்: மின்சார கட்டணம் ரூ.500 செலுத்தி வந்த நிலையில் தற்போது 28,500 ரூபாய் வருவதாகவும், மின்சார ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் நேற்று புகார் மனு அளித்தனர்.
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் வெலக்கல் நத்தம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், " எங்கள் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஒவ்வொரு முறையும் 500 ரூபாய் அல்லது அதற்கு குறைவாக மின்சார கட்டணம் செலுத்தி வந்த நிலையில், இந்த மாதம் பெருந்தொகையாக ஒவ்வொரு வீட்டுக்கும் 10 ஆயிரம், 20 ஆயிரத்துக்கும் மேலாக மின் கட்டணம் வந்துள்ளது.
குறிப்பாக, எங்களது கிராமத்தில் குடிசை வீட்டில் வசித்து வரும் அப்பாதுரை என்பவருக்கு அதிகபட்சமாக ரூ.28,500 மின்கட்டணம் வந்துள்ளது. இது குறித்து உள்ளூர் மின்சார அதிகாரிகளிடம் முறையிட்டோம். ஆனால், அவர்கள் அலட்சியமாக உள்ளனர். எங்கள் கிராமத்தில் மட்டும் அல்ல அங்குள்ள நிறைய வீட்டுக்கு அளவுக்கு அதிகமாக மின்சார கட்டணம் வந்துள்ளது. இதற்கு மின் ஊழியர்கள்தான் காரணம் எனவும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தெரிவித்திருந்தனர்.