தற்கொலை செய்துகொண்ட மாணவி; கொந்தளித்த மாணவர்கள்: கல்லூரி நிர்வாகம் விளக்கம்

தற்கொலை செய்துகொண்ட மாணவி; கொந்தளித்த மாணவர்கள்: கல்லூரி நிர்வாகம் விளக்கம்
Updated on
1 min read

சோழிங்கநல்லூர் அருகே செம்மஞ்சேரியில் உள்ள தனியார் கல்லூரியில் மாணவி ஒருவர் நேற்று (புதன்கிழமை) தற்கொலை செய்துகொண்டார். இதனையடுத்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், கல்லூரி நிர்வாகம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

கல்லூரி நிர்வாகத்தின் விளக்கத்தில், "தேர்வில் முறைகேட்டில் ஈடுபடும் மாணவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படுமோ அதே நடவடிக்கைதான் சம்பந்தப்பட்ட மாணவி மீதும் எடுக்கப்பட்டது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவி தற்கொலையும் மாணவர்கள் போராட்டமும்:

ஹைதராபாத்தில் உள்ள தனியர் நிறுவனத்தில் உயர் பதவியில் இருக்கும் ராஜா ரெட்டி என்பவரின் மகள் துவ்ரு ராகா மோனிகா. இவர் பொறியியல் முதலாம் ஆண்டு பயின்று வந்தார். நேற்று பருவநிலை தேர்வு நடந்தது. அப்போது, தேர்வு அறையில் முறைகேட்டில் ஈடுபட்டதாக மாணவி மோனிகாவை கண்காணிப்பாளர் வெளியேற்றியுள்ளார். அவரை அறையில் இருந்து வெளியேற்றுவதற்கு முன்னதாக ஒரு படிவத்தில் கையெழுத்தும் வாங்கியுள்ளார். படிவத்தில் கையெழுத்திட்டு கொடுத்துவிட்டு மோனிகா விடுதி அறைக்குச் சென்றுள்ளார். அங்கு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. தேர்வு முடிந்தவுடன் விடுதி அறைக்குத் திரும்பிய சக தோழிகள் மோனிகாவின் சடலத்தைப் பார்த்து கல்லூரி நிர்வாகத்துக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனையடுத்து போலீஸார் வந்து சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

'குட்பை' எஸ்எம்எஸ்

தற்கொலைக்கு முன்னதாக அதே கல்லூரியில் பயின்று வரும் அவருடைய சகோதரருக்கு 'குட்பை' என மெசேஜ் அனுப்பியுள்ளார் மோனிகா. தேர்வை எழுதிவிட்டு வெளியே வந்து தனது செல்ஃபோனைப் பார்த்த மோனிகாவின் சகோதரர் படித்து விடுதிக்கு விரைந்துள்ளார். அங்கு சகோதரியின் சடலத்தைப் பார்த்து அவர் அதிர்ந்து போயுள்ளார்.

மோனிகா அனுப்பிய குறுந்தகவல் செய்தியை செம்மஞ்சேரி காவல் உயர் அதிகாரி ஒருவர் உறுதி செய்துள்ளார்.

கல்லூரியின் அழுத்தமே காரணம்:

இந்நிலையில், மாணவியின் தற்கொலைக்கு கல்லூரி நிர்வாகம்தான் காரணம் என்று கூறி மாணவர்கள் சிலர் நேற்று இரவு கல்லூரி வளாகத்தில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், கல்லூரி வளாகத்தில் இருந்த மின்விளக்கு, பேருந்து கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர். இதனால் கல்லூரி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், சில மாணவர்கள் கல்லூரி வாயிலுக்கு வந்து கோஷங்களை எழுப்பினர். சிலர் கல்லூரி வளாகத்தில் இருந்த பொருட்களுக்கு தீ வைத்தனர். உடனே, தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீ அணைக்கப்பட்டது. அதையடுத்து, அங்கு 100-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கு போலீஸார் எச்சரிக்கை விடுத்ததையடுத்து, மாணவர்கள் கலைந்து சென்றனர்.

தற்கொலை தீர்வாகாது..

எந்த ஒரு பிரச்சினைக்கும் தற்கொலை நிச்சயம் தீர்வாகாது. தற்கொலை எண்ணம் தோன்றினால் யாராக இருந்தாலும் மாநில உதவி மையமான 104- உதவி எண்ணுக்கு அழைக்கலாம். அல்லது 'ஸ்நேகா' தற்கொலை தடுப்பு மையத்தை 044-24640050 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in