

சென்னையில் இப்போதைக்கு விட்டுவிட்டு மழை பெய்யும் ஆனால் இரவில் மீண்டும் மழை பெய்யும் என வானிலை ஆர்வலரும் பதிவருமான தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.
வடகிழக்கு பருவமழை தொடங்கியதிலிருந்து வானிலை முன்அறிவிப்புகளை அவ்வப்போது தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பிரதீப் ஜான் பகிர்ந்து வருகிறார். இன்று (நவம்பர் 3) காலை 10.50 மணியளவில் அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் சென்னை மழை குறித்து ஒரு நிலைத்தகவலை பதிந்துள்ளார்.
அதில், "சென்னையில் பகலில் விட்டுவிட்டு மழை பெய்யும். இது ஆங்காங்கே தேங்கிய நீரை வெளியேற்ற உதவியாக இருக்கும். அதேவேளையில் இரவு நேரத்தில் சென்னையில் மீண்டும் மழை பெய்யும். ஆனால் அது நேற்றைப்போல் கனமழையாக இருக்குமா என்பதை உறுதியாக சொல்ல முடியாது. கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் அதிகபட்சமாக டிஜிபி அலுவலகத்தில் 30 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலையானது அதே இடத்தில் நிலை கொண்டுள்ளதால் டெல்டா பகுதிகள் முதல் சென்னைவரை மழை நீடிக்கும். சென்னை கடலோரப் பகுதியில் இன்று பின்னிரவில் காற்று குவியும் என்பதால் இன்றிரவும் மழை நீடிக்கும். ஆனால், நேற்றைப்போல் மழை இருக்குமா எனத் தெரியாது" இவ்வாறு அவர் கூறியுள்ளார்.