Published : 10 Nov 2017 10:10 AM
Last Updated : 10 Nov 2017 10:10 AM

பின்னால் வாகனங்கள் வருவதை காண்பிக்கும் கண்ணாடிகள் இல்லாத பைக்குகளுக்கு அபராதம்: உயர் நீதிமன்றம் உத்தரவு

இரு சக்கர வாகனங்களில் பின்னால் வரும் வாகனங்களைக் காட்டும் பக்கவாட்டுக் கண்ணாடிகள் இல்லாமல் ஓட்டுபவர்களிடம் இருந்து அபராதம் வசூலிக்கக் கோரிய மனுவை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க போக்குவரத்துத் துறை ஆணையருக்கு உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடியைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்யன் உயர் நீதிமன்ற கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். அதில் கூறியிருப்பதாவது:

இரு சக்கர வாகனங்களில் பின்னால் வரும் வாகனங்களை தெரிந்து கொள்ள வைக்கப்பட்டிருக்கும் பக்கவாட்டுக் கண்ணாடிகளை பலர் அகற்றிவிட்டு வாகனங்களை ஓட்டுகின்றனர். இதனால் விபத்துகளும், உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன.

போக்குவரத்து ஆய்வுப் பிரிவின் ஆய்வுப்படி 15 முதல் 24 வயதுக்குட்பட்ட 48,420 பேர் உயிரிழந்துள்ளனர். 77.1 சதவீத விபத்துகள் ஓட்டுநரின் தவறாலேயே நிகழ்கிறது. ஆனால் இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.

பெங்களூருவில் அபராதம்

பெங்களூருவில் பக்கவாட்டுக் கண்ணாடிகள் இன்றி வாகனம் ஓட்டுபவர்களிடம் ரூ.300 அபராதம் வசூலிக்கப்படுகிறது. ஆகவே, தமிழகத்திலும் அபராதம் வசூலிக்க நடவடிக்கை எடுக்குமாறு போக்குவரத்துத் துறை ஆணையர் மற்றும் டிஜிபிக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.

இதை விசாரித்த நீதிபதிகள் வேணுகோபால், அப்துல் குத்தூஸ் அமர்வு மனுவை பரிசீலித்து 4 வாரங்களில் உரிய நடவடிக்கை எடுக்க போக்குவரத்து ஆணையருக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x