

சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டதற்காக உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த சங்கர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் வரும் டிசம்பர் 12-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என திருப்பூர் வன்கொடுமை தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
திருப்பூர் மாவட்டம் உடுமலை வட்டம் குமரலிங்கத்தை சேர்ந்த சங்கர் (22). இவர் கவுசல்யாவை காதலித்து மணந்தார். இந்நிலையில், கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் 13-ம் தேதி, உடுமலையில் சங்கர் படுகொலை செய்யப்பட்டார். இதில் கவுசல்யா படுகாயம் அடைந்தார்.
சங்கர் கொலை வழக்கு தொடர்பாக, கவுசல்யாவின் தந்தை சின்னச்சாமி, தாய் அன்னலட்சுமி, மாமா பாண்டித்துரை, மற்றும் எம்.மணிகண்டன், எம்.மைக்கெல் (எ) மதன், பி.செல்வக்குமார், பி.ஜெகதீசன், தன்ராஜ், தமிழ் கலைவாணன், கல்லூரி மாணவர் பிரசன்னா, மற்றொரு மணிகண்டன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களில், 9 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் வன்கொடுமை தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த வழக்கு சிறப்பு நீதிபதி அலமேலு நடராஜன் முன்னிலையில் இன்று (நவம்பர் 14- 2017) விசாரணைக்கு வந்தது. சம்பந்தப்பட்ட 11 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். சங்கரின் மனைவி கவுசல்யாவும் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
இருதரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், இந்த வழக்கில் வரும் டிசம்பர் 12-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என சிறப்பு நீதிமன்ற நீதிபதி அறிவித்தார்.