“படுகொலை மையங்களாக மாறிவரும் நீட் பயிற்சி மையங்கள்” - கே.எஸ்.அழகிரி காட்டம்

கே.எஸ்.அழகிரி | கோப்புப்படம்
கே.எஸ்.அழகிரி | கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: "தமிழகத்தை பொறுத்தவரை நீட் தேர்வு என்பது பணத்தை வாரி இறைத்து நீட் தேர்வு பயிற்சி மையத்தில் பயின்றவர்கள் தான் வெற்றி பெற முடியும் என்ற அநீதி நிகழ்ந்து வருகிறது. இந்த அநீதியை தடுக்கிற வகையில் நீட் தேர்வு பயிற்சி மையங்கள் செயல்படுவது குறித்து தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். நீட் தேர்வு பயிற்சி மையங்கள் படுகொலை மையங்களாக மாறி வருகின்றன" என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: "தமிழக அரசியல் கட்சிகளில் பாஜகவை தவிர திமுக தலைமையிலான காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி தொடர்ந்து நீட் தேர்வை எதிர்த்து போராடி வருகின்றன. சட்டமன்றத்தில் நீட் விலக்கு மசோதா நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. ஆளுநர் அதை இழுத்தடித்த பிறகு வேறு வழியின்றி தற்போது குடியரசுத் தலைவருக்கு அனுப்பி உள்ளார். நீட் தேர்வு குறித்து சமீபத்தில் ஆளுநர் கூறிய கருத்து வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக உள்ளது. ஆளுநரை விட ஒரு கல் நெஞ்சக்காரர் எவரும் இருக்க முடியாது என்பதற்கு அவரது நச்சுக் கருத்து சான்றாக அமைந்துள்ளது. தமிழக ஆளுநர் தமிழ் சமுதாயத்துக்கே விரோதியாக செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில், நீட் தேர்வு பயிற்சி மையத்தில் பயின்று வந்த குரோம்பேட்டையை சேர்ந்த மாணவர் ஜெகதீஸ்வரன் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி செய்தி மிகுந்த வேதனையை அளித்து வருகிறது. அவரது மரணத்தின் ஈரம் காய்வதற்குள்ளாகவே அவரது தந்தை செல்வசேகரும் தற்கொலை செய்து கொண்டது நம்மை கடும் துன்பத்தில் ஆழ்த்தியுள்ளது. நீட் கனவு பொய்த்துப் போன காரணத்தினாலே இத்தகைய தற்கொலைகள் தமிழகத்தில் தொடர் கதையாக நடந்து வருகிறது.

தமிழகத்தை பொறுத்தவரை நீட் தேர்வு என்பது பணத்தை வாரி இறைத்து நீட் தேர்வு பயிற்சி மையத்தில் பயின்றவர்கள்தான் வெற்றி பெற முடியும் என்ற அநீதி நிகழ்ந்து வருகிறது. இந்த அநீதியை தடுக்கிற வகையில் நீட் தேர்வு பயிற்சி மையங்கள் செயல்படுவது குறித்து தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். நீட் தேர்வு பயிற்சி மையங்கள் படுகொலை மையங்களாக மாறி வருகின்றன.

எனவே, நீட் தேர்வை எதிர்த்து நமது போராட்டம் ஓயாது. இப்போராட்டத்தின் மூலம் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட சமுதாய மக்களின் சமூகநீதிப் போராட்டமாகவே அதை நாம் கருத வேண்டும். அந்த வகையில் மறைந்த மாணவர் ஜெகதீஸ்வரன், அவரது தந்தை செல்வசேகர் ஆகியோரின் மறைவு இழப்பு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in