இந்து கடவுள்களை இழிவாகப் பேசியதாக வழக்கு: விடுதலை சிகப்பி மீதான விசாரணைக்கு ஐகோர்ட் தடை

விடுதலை சிகப்பி | கோப்புப்படம்
விடுதலை சிகப்பி | கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: இந்து கடவுள்களை இழிவாக பேசியதாக சினிமா உதவி இயக்குநர் விடுதலை சிகப்பி மீது தொடரப்பட்ட வழக்கின் விசாரணைக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் கடந்த ஏப்ரல் 30-ம் தேதி சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மலக்குழி மரணம் என்ற தலைப்பில் உதவி இயக்குநர் விடுதலை சிகப்பி கவிதை ஒன்றை வாசித்தார். இந்தக் கவிதை இந்து மத கடவுள்களை அவமதிக்கும் வகையில் உள்ளதாகக் கூறி இந்து முன்னணி அமைப்பின் சென்னை மாவட்ட தலைவர் சுரேஷ் அளித்த புகாரின் அடிப்படையில் பி.விக்னேஷ்வரன் என்கிற விடுதலை சிகப்பி மீது ஐந்து பிரிவுகளின் கீழ் அபிராமபுரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி விடுதலை சிகப்பி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவில், மனித கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுப்பட்டுள்ளவர்களின் நிலையை விளக்கும் வகையிலேயே கவிதையை வாசித்தேன். இதில் யாருடைய மத உணர்வுகளையும் எந்த விதத்திலும் தான் புண்படுத்தவில்லை என மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, விடுதலை சிகப்பி மீதான வழக்கு விசாரணைக்கு தடை விதித்து வழக்கை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in