Published : 23 Nov 2017 05:27 PM
Last Updated : 23 Nov 2017 05:27 PM

இரட்டை இலை சின்ன விவகாரத்தில் தேர்தல் ஆணையம் நடுநிலையுடன் இல்லை; உச்ச நீதிமன்றம் செல்வோம்: டிடிவி தினகரன்

இரட்டை இலை சின்னத்தை முடக்கிய விவகாரத்தில் மத்திய அரசின் தலையீடு உள்ளது. தேர்தல் ஆணையம் நடுநிலையாக செயல்படவில்லை. இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தை சட்ட ரீதியாக அணுகி நியாயம் பெறுவோம் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சேலத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தினகரன் கூறியதாவது:

''இரட்டை இலை சின்னம் தீர்ப்பு விவகாரத்தில் தேர்தல் ஆணையம் நடுநிலையாக நடந்துகொள்ளவில்லை என்பதற்கு இதைவிட சிறந்த உதாரணம் இருக்க முடியாது. பன்னீர்செல்வம் அணியில் 12 எம்.பி.க்கள், 12 எம்.எல்.ஏக்கள்தான் இருந்தார்கள். அன்று அவர்கள் இரட்டை இலை சின்னத்தை முடக்கக் கேட்டபோது தேர்தல் ஆணையம் முடக்கியது. இன்றைக்கு தீர்ப்பில் நீதிபதி சாதிக் அலி தீர்ப்பை அடிப்படையாக வைத்துதான் கொடுத்திருக்கிறோம் என்று சொல்கிறார்கள்.

கடந்த பிப்ரவரி மாதம் எங்களிடம் 122 எம்.எல்.ஏக்களும், 37 நாடாளுமன்ற உறுப்பினர்களும் இருந்தபோது அதை கருத்தில் கொள்ளாமல் சின்னத்தை முடக்குவதிலேயே தேர்தல் ஆணையம் உறுதியாக இருந்தது. அன்று சின்னத்தை முடக்கிய போது சாதிக் அலி தீர்ப்பை வசதியாக மறந்து விட்டு ஓபிஎஸ் சொன்னதை கேட்டு ஆர்.கே.நகர் தேர்தலுக்கு முதல் நாள் நள்ளிரவில் சின்னத்தை முடக்கினார்கள்.

ஆகவேதான் சொல்கிறோம், தேர்தல் ஆணையம் நடுநிலையாக செயல்படவில்லை. அதனால் இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை அணுக உள்ளோம். ஏற்கெனவே பல பொதுக்குழு உறுப்பினர்கள் 1877 பிரமாண பத்திரத்தில் 300-க்கும் மேற்பட்ட பிரமாண பத்திரத்தில் உள்ள குறைகளை , மோசடிகளை சொல்லியிருந்தோம்.

பத்துக்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் டெல்லிக்கே நேரில் சென்று விசாரணையின் போது காத்திருந்து கலந்துகொண்டு மனுத்தாக்கல் செய்து குறுக்கு விசாரணைக்கு கேட்டபோது கடைசியில் பதில் சொல்கிறோம் என்று கூறினார்கள். ஆனால் இன்று நிராகரித்திருப்பதிலிருந்தே தேர்தல் ஆணையம் நடுநிலையாக செயல்படவில்லை என்று இந்திய மக்கள் அனைவருக்கும் நன்றாக தெரியும்.

இதில் நிச்சயம் மத்திய அரசின் தலையீடு இருக்கிறது. இதை உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டு சட்டரீதியாக போராடுவோம். தற்போது இரட்டை இலையும், கட்சியும் குரங்கு கையில் சிக்கிய பூமாலையாகத் உள்ளது. அதை நிச்சயம் மீட்டெடுப்போம்.

99 சதவீத தொண்டர்கள் எங்களிடம் தான் உள்ளனர். தற்போது எடப்பாடி பழனிசாமி வசம் 112 எம்.எல்.ஏக்கள் தான் உள்ளனர் என்பதை தேர்தல் ஆணையமே தெரிவித்து விட்டது. அறுதி பெரும்பான்மை இல்லை என்பதை ஒத்துக்கொண்டுள்ளனர். இதை நிச்சயம் ஆளுநர்  கவனத்துக்கு கொண்டு செல்வோம்.

ஆர்.கே.நகர் இடைதேர்தலில் நான் நிச்சயம் போட்டியிடுவேன். வெற்றியும் பெறுவேன். மைத்ரேயன் இன்று எதிர்ப்பதற்கு காரணம், ஆரம்பத்தில் மத்திய அரசு ஓபிஎஸ்ஸை ஆதரித்தது பிறகு எடப்பாடியை ஆதரிக்கிறது. தற்போது ஓபிஎஸ் நிலை திரிசங்கு சொர்க்கம் போன்று உள்ளது அதைத்தான் மைத்ரேயன் சொல்கிறார். பொறுத்திருந்து பாருங்கள்.”

இவ்வாறு தினகரன் பேட்டி அளித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x