

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்துவரும் நிலையில் இன்று (நவம்பர் 2) தலைநகர் சென்னை மட்டும் தமிழகத்தின் பிற பகுதிகளில் மழை நிலவரம் குறித்து வானிலை ஆர்வலரும் பதிவருமான தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கணித்துள்ளார்.
அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் (https://www.facebook.com/tamilnaduweatherman/) காலை 7.22 மணியளவில் பதிந்த நிலைத்தகவலில்: இன்று திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் நல்ல மழை வாய்ப்பு இருக்கிறது.
சென்னையில் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்பிருக்கிறது. நகரில் விட்டுவிட்டு மழை பெய்யும். சில நேரங்களில் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் மழை பெய்யும். நகரில் பரவலாக ஒரே நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பில்லை. இப்போதைக்கு வெள்ள அபாயம் ஏதுமில்லை. வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம். கிழக்கு மற்றும் வடகிழக்கு பகுதியில் நிலைகொண்டிருக்கும் மேகக்கூட்டங்கள் சென்னையை நோக்கி நகரும் அவ்வாறு சென்னையை நோக்கி நகரும்போது அவை குவிந்து மழை பெய்யும்.
ஆனால், சில நேரங்களில் சில இடங்களில் மட்டுமே மழை பெய்யும்.
திருநெல்வேலியில் பல ஆண்டுகளுக்குப் பின்னர் 150 மி.மீ அளவு மழை பெய்திருக்கிறது. தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் 136 மி.மீ. அளவு மழை பெய்துள்ளது. திருச்செந்தூரில் ஓராண்டுக்குப் பின்னர் 65 மி.மீ அளவு மழை பெய்துள்ளது. இன்றைய தினம் டெல்டா பகுதியில் பரவலாக மழை நீடிக்கும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.