

மேட்டூர்: மேச்சேரி - மேட்டூர் சாலையில் தேங்கி நிற்கும் கழிவுநீரால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
சேலம் மாவட்டம் மேச்சேரி - மேட்டூர் சாலையில் தினமும் 500-க்கும் மேற்பட்ட இரு, நான்கு சக்கர வாகனங்கள், கனரக வாகனங்கள் செல்கின்றன. இதனிடையே சாலையின் இரு புறமும் விரிவாக்கப் பணி நடைபெறுகிறது. இந்நிலையில் கழிவுநீர் செல்ல சாக்கடை அமைப்பதற்காக சில இடங்களில் கால்வாய் வெட்டப்பட்டுள்ளது. இந்த பணிகள் முழுமையாக முடிவடையாததால் குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகங்களில் இருந்து வரும் கழிவு நீர், சாலையில் தேங்கி வழிந்தோடுகிறது.
இது குறித்து, அப்பகுதி மக்கள் கூறியதாவது: மேச்சேரி - மேட்டூர் சாலையில் கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக சாலை விரிவாக்கப் பணி நடக்கிறது. இதற்காக சாலையின் இருபுறமும் பாதாள சாக்கடை அமைக்க கால்வாய் வெட்டப்பட்டு கிடப்பில் போட்டுள்ளனர். இதனால், மேச்சேரி பேருந்து நிலையத்திலிருந்து ஒரு கிமீ தொலைவில் மேட்டூர் சாலையில், குடியிருப்பு மற்றும் வணிக வளாகங்களில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தேங்கியுள்ளது. இந்நிலை கடந்த 3 மாதங்களாக உள்ளது.
இதன் காரணமாக போக்குவரத்து நெரிசலும், விபத்து அபாயமும் ஏற்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். கடந்த இரண்டு வாரத்தில் 7-க்கும் மேற்பட்ட விபத்துகள் ஏற்பட்டுள்ளன. கழிவு நீர் தேங்கி நிற்பதால் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, சாலையில் கழிவுநீர் தேங்குவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.