சென்னையில் செப்டம்பர் 30-ம் தேதிக்குள் மழைநீர் வடிகால், வெள்ளத்தடுப்பு பணிகளை முடிக்க வேண்டும்: தலைமைச் செயலர் அறிவுறுத்தல்

சென்னையில் செப்டம்பர் 30-ம் தேதிக்குள் மழைநீர் வடிகால், வெள்ளத்தடுப்பு பணிகளை முடிக்க வேண்டும்: தலைமைச் செயலர் அறிவுறுத்தல்
Updated on
1 min read

சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள நடைபெறும் வெள்ளதடுப்பு நடவடிக்கை மற்றும் மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நேற்று முன்தினம் தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா தலைமையில் நடைபெற்றது.

இதில், மின்வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானி, வருவாய்த் துறை செயலர் குமார் ஜயந்த், சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன், சென்னை மெட்ரோ ரயில் மேலாண் இயக்குநர் சித்திக், நகராட்சி நிர்வாகத் துறை செயலர் கார்த்திகேயன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் பல்வேறு துறைகள் மூலம் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. குறிப்பாக கடந்த 15 நாட்களுக்குள் நடைபெற்ற பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளின்தற்போதைய உண்மை நிலை குறித்துஒரு பிரத்யேக குழு மூலம் தகவல் பெற்று ஆய்வு செய்யப்பட்டது.

அந்த ஆய்வில் 62 இடங்களில் தடுப்பரண் (Barricade) அமைத்தல், மின்சார கம்பங்கள் மாற்றுதல், குடிநீர் குழாய் மாற்றியமைத்தல், விடுபட்ட மழைநீர் வடிகால் பணிகளின் நிலை குறித்தும் கேட்கப்பட்டுஇவ்விடங்களில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆராயப்பட்டது.

அண்ணா சாலையில் விடுபட்ட இடங்களில் மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. மேலும், சென்னை மாநகராட்சியில் தற்போது பேரிடர் மேலாண்மையின் கீழ் நடைபெற்று வரும் பணிகளைசெப்.30-க்குள் முடிக்க அறிவுறுத்தப்பட்டது. எழும்பூர் அருகில் ஈவேராபெரியார் சாலையில் புனித ஆன்றோசர்ச் அருகில் தேங்கும் மழைநீரை, கூவத்தில் சேர்க்க குறுக்கு கால்வாய்அமைக்கும் பணியைத் துரிதமாக முடிக்க தலைமைச் செயலர் உத்தரவிட்டார்.

இதுதவிர சென்னை மாநகராட்சியில் மழைநீர் வடிகால் பணிகளை விரைவாக முடிக்கவும், பழைய வடிகால்களில் வண்டல் வடிகட்டி இல்லாத இடங்களைக் கண்டறிந்து அமைக்கவும் அறிவுறுத்தினார்.

ஆவடி மாநகராட்சி, ஐஏஎப் சாலை, சேக்காடு அண்ணாநகர் பிரதான சாலை வலம்புரி விநாயகர்கோயில் அருகில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை விரைவாக முடிக்க அறிவுறுத்தப்பட்டது.

தாம்பரம் மாநகராட்சியில் குருசாமி பிரதான சாலை, பல்லாவரம்- துரைப்பாக்கம் 200 அடி சுற்று வட்டச் சாலை மற்றும் பிற இடங்களில் நடைபெற்று வரும் பணிகளை செப்.30-க்குள் முடிக்க வேண்டும்.

மேலும், நீர்வளத் துறையால்ரூ.250 கோடியில் செயல்படுத்தப்படும் பள்ளிக்கரணை அணை ஏரி, மணலி புதுநகர், கொளத்தூர் ஏரி, செம்பரம்பாக்கம் ஏரி, போரூர் ஏரி, உபரிநீர் கால்வாய் ஆகிய பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

ஓட்டேரி கால்வாய், விருகம்பாக்கம் கால்வாய், பக்கிங்ஹாம் கால்வாய்களில் ஆகாயத் தாமரை அகற்றுதல், தூர்வாரும் பணிகள் மற்றும் அடையாறு, கூவம் மற்றும் எண்ணூர் முகத்துவாரம் பகுதிகளில் மணல் திட்டுகளை அகற்றி மழைநீர் விரைவாக வடிய ஏதுவாக பணிகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in