Published : 14 Aug 2023 04:07 AM
Last Updated : 14 Aug 2023 04:07 AM

திருப்பத்தூர் அருகே சிகிச்சைக்கு உதவி கோரியிருந்த நிலையில் அரிய வகை நோயால் குழந்தை உயிரிழப்பு

திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே அரிய வகை நோயால் குழந்தை உயிரிழந்தது.

திருப்பத்தூர் மாவட்டம் குரிசிலாப்பட்டு அடுத்த வசந்தபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் தீபன் (36). இவரது மனைவி ரம்யா (31). இந்நிலையில், ரம்யா தனது 6 மாத கைக்குழந்தையுடன் கடந்த ஜூலை 31-ம் தேதி திருப்பத்தூர் ஆட்சியர் பாஸ்கர பாண்டியனிடம் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில், ‘‘எனது 6 மாத பெண் குழந்தைக்கு உடல்நிலை பாதிக்கப் பட்டு கால்களில் அசைவு ஏதும் ஏற்படவில்லை.

இதையடுத்து, குழந்தைக்கு சிகிச்சை மற்றும் மருத்துவ பரிசோதனைகள் செய்ய தொடங்கினேன். இதற்கிடையே, என் கணவர் தீபன் சில மாதங்களுக்கு முன்பு மாரடைப்பால் உயிரிழந்தார்.

இந்நிலையில், வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தைக்கு உலகிலேயே அரிய வகை நோயான "ஸ்பைனல் மஸ்குலர் அட்ராபி" வகை-1 என்ற நோய் தாக்கியுள்ளதாகவும், இதற்கான ஊசி இந்தியாவிலேயே இல்லை, அமெரிக்காவில் தான் உள்ளது. அந்த ஊசியின் விலை ரூ.17 கோடி என மருத்துவர்கள் தெரிவித்தனர். என் குழந்தையை காப்பாற்ற அரசு உதவவேண்டும்" என தெரிவித்திருந்தார்.

இந்த மனுவை பெற்ற ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், இது தொடர்பாக மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் மாரிமுத்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இது தொடர்பான விரிவான செய்தி இந்து தமிழ் திசை நாளிதழில் வெளியானது. இந்நிலையில், அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தை நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக உயிரிழந்தது.

இது குறித்து ரம்யாவின் உறவினர்கள் கூறிய தாவது, ‘‘குழந்தையை காப்பாற்ற வேண்டி ரம்யா ஏற்கெனவே கடந்த 15 நாட்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியரிடம் உதவி கேட்டு கோரிக்கை மனு வழங்கியிருந்தார். ஆனால் இதுவரை அரசு அதி காரிகள் யாரும் எங்களை தொடர்பு கொள்ள வில்லை. இந் நிலையில், தற்போது குழந்தை உயிரிழந்துவிட்டது. குழந்தையை காப்பாற்ற அதிகாரிகள் முயற்சி எடுத்திருந்தால் அந்த குழந்தையை காப்பாற்றியிருக்கலாம்’’ என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x