Published : 10 Nov 2017 11:56 AM
Last Updated : 10 Nov 2017 11:56 AM

147 இடங்களில் தொடர்கிறது வருமான வரி சோதனை: 60 போலி நிறுவனங்கள் கண்டறியப்பட்டதாக தகவல்

போலி நிறுவனங்கள் தொடங்கி, வரி ஏய்ப்பு செய்ததாக சசிகலா, டி.டி.வி தினகரனின் வீடு, அலுவலகங்கள் மற்றும் அவரது உறவினர்கள் வீடுகளிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் இரண்டாவது நாளாக தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.

சசிகலா, டி.டி.வி தினகரன் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் தொடர் சோதனை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து பேசிய வருமான வரித்துறை புலனாய்வு இயக்குனர், கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து ஆய்வு செய்து வருவதாக தகவல் அளித்துள்ளார். 147 இடங்களில் இந்த சோதனை நடக்கிறது.

மேலும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட இடங்களில் மீண்டும் சோதனை தொடரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். போலி நிறுவனங்கள் தொடங்கி வரி ஏய்ப்பு செய்ததாக சசிகலா, டி.டி.வி தினகரனின் வீடு, அலுவலகங்கள் மற்றும் அவரது உறவினர்கள் வீடுகளிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

சசிகலா உறவினர் வீடுகளில் வருமானவரி சோதனை 2-வது நாளாக இன்றும் தொடர்கிறது. 'ஆபரேஷன் கிளீன் பிளாக்மணி' என்ற சோதனை நேற்று காலை 5.30 மணிக்கு தொடங்கியது. 1800 அதிகாரிகள் கலந்து கொண்ட இந்த சோதனை, சென்னை, திருச்சி, தஞ்சாவூர், மன்னார்குடி உள்பட தமிழகத்தில் 187 இடங்களில் சோதனை நடைபெற்றது. 215 சொத்துகள், 350 நபர்கள் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டு சோதனை நடைபெறுவதாக வருமானவரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

'ஆபரேஷன் க்ளீன் பிளாக்மணி' என்று பெயரிடப்பட்ட இந்த சோதனை 187 இடங்களில் நடந்ததை அடுத்து 40 இடங்களில் சோதனை முடிந்தது, இன்று மீண்டும் 147 இடங்களில் சோதனை தொடர்கிறது. டெல்லி, கொச்சி, ஹைதராபாத் போன்ற இடங்களிலிருந்து கூடுதல் வருமான வரித்துறை அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு இந்த சோதனை நடந்து வருகிறது.

ஜெயா டிவி இயக்குநர் விவேக் ஜெயராமன் வீடு, டிடிவி தினகரன் அலுவலகம், தி.நகரில் உள்ள விவேக் ஜெயராமன் சகோதரி வீடு, ஜெயா டிவி அலுவலகம் மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட இடங்களில் தொடர்ந்து சோதனை நடந்து வருகிறது.

டி.டி.வி. தினகரன் மனைவி அனுராதாவுக்கு சொந்தமான சென்னை அடையாறில் உள்ள ஏற்றுமதி இறக்குமதி நிறுவனத்திலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்துகின்றனர்.

நமது எம்ஜிஆர் அலுவலகம், ஜாஸ் கார்ப்பரேட் அலுவலகத்திலும் சோதனை தொடர்கிறது. திரையரங்கு உள்ள பீனிக்ஸ் மால் அலுவலகத்திலும் இரண்டாவது நாளாக சோதனை தொடர்கிறது. இதனால் இன்றும் திரைப்படக் காட்சிகளும் ரத்து செய்யப்பட்டன.

இந்த சோதனையில் 60 போலி நிறுவனங்கள் குறித்த தகவல்கள் கிடைத்துள்ளன. சோதனையில் எவ்வளவு கருப்புப்பணம் பிடிபட்டது, டெபாசிட் செய்யப்பட்டுள்ள தொகைகள் எவ்வளவு பணம் கைப்பற்றப்பட்டுள்ளன என மதிப்பிடும் பணி தொடர்ந்து நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சசிகலா உறவினர்கள், நண்பர்களின் 317 வங்கி கணக்குகள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இன்றும் சோதனை தொடர்வதை அடுத்து இறுதியாக கணக்கிடும் பணிகள் முடிந்த பின்னரே முழுமையான தகவலைத் தெரிவிப்போம் என வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

விவேக் ஜெயராமன் வீட்டில் இன்றும் வருமான வரி சோதனை தொடரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆவணங்களை ஆய்வு செய்த அதிகாரிகள் விவேக்கிடம் எழுத்துப்பூர்வமாக அறிக்கை பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெயா டிவி அலுவலகத்தில் விடிய விடிய வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர் . விவேக், அவரது சகோதரி கிருஷ்ணப்ரியா இல்லங்களிலும் விடிய விடிய சோதனை நடைபெற்றது .

தஞ்சையில் 7 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் 2வது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர். சசிகலாவின் அண்ணன் மகன் மகாதேவன் வீடு, மருத்துவர் வெங்கடேஷ் மற்றும் அவரது நண்பர் வீடு உள்ளிட்ட 7 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. மன்னார்குடியில் திவாகரனின் வீடு, கல்லூரியில் 2வது நாளாக வருமானவரி சோதனை நடைபெற்று வருகிறது.

சென்னை அண்ணா நகரில் விவேக் ஜெயராமனின் மாமனார் பாஸ்கர் வீட்டிலும் 2வது நாளாக வருமான வரித்துறை சோதனை நடைபெறுகிறது. நாமக்கல்லில் சசிகலா வழக்கறிஞர் செந்தில் வீட்டிலும் செந்தில் நண்பர் சுப்பிரமணியன் வீட்டிலும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட் அருகிலுள்ள கர்சன் எஸ்டேட்டிலும் நேற்றிரவு முடிவடைந்த சோதனை இன்று காலை மீண்டும் துவங்கியது. எஸ்டேட் மேலாளர் நடராஜனை அழைத்துச் சென்று அதிகாரிகள் இன்றும் விசாரணை நடத்துகின்றனர்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x