Published : 06 Jul 2014 02:41 PM
Last Updated : 06 Jul 2014 02:41 PM

வளரிளம் பெண்கள் இடைநிற்றலை தடுக்க பள்ளிகளில் பொம்மலாட்டம்

வளர் இளம் பெண்கள் பள்ளிகளில் இடைநிற்றலைத் தடுக்க பொம்மலாட்டம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

பள்ளி செல்லும் வளர் இளம் குழந்தைகள் குடும்பச் சூழல் காரணமாக பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர். மாணவர்களின் எண்ணிக்கையும் குறைந்து வருவதால் பல அரசுப் பள்ளிகள் மூடப்பட்டு வருகின்றன.

பள்ளிகளில் பாலியல் தொந்தரவுகள் மட்டுமின்றி, குடும்பச் சூழ்நிலை காரணமாகவும் வளர்இளம் பெண்கள் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு வேலைக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். ஆனால், வேலைக்குச் செல்லும் இடங்களில்தான் பெண்கள் அதிகமான மற்றும் வெளியில் சொல்ல முடியாத வகையிலான பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

எனவே, வளர் இளம் பெண்கள் எதிர்கொள்ளும் சமூகம் சார்ந்த பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது, தங்களுக்கு உள்ள அடிப்படை உரிமைகள், கல்வி உரிமைகள், பெற்றோர் அளிக்க வேண்டிய முக்கியத்துவம், கல்வியின் சிறப்பு, இடை நின்றல் மற்றும் வளர் இளம் பெண்கள் வேலைக்குச் செல்வதால் சந்திக்கக்கூடிய பிரச்சினைகள் குறித்து அவர்களுக்கு எடுத்துக்கூறி கற்றலின் அவசியம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவது முக்கியமானது.

திருப்பூரைச் சேர்ந்த சமூக கல்வி மற்றும் மக்கள் முன்னேற்ற மையம் பள்ளியில் பயிலும் வளர் இளம் பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்தும், கல்வியின் அவசியம் குறித்தும் திருநெல்வேலி, விருதுநகர் மாவட்டங்களில் அந்தந்த கல்வி மாவட்டங்களில் உள்ள தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. சாதாரணமாக கருத்தரங்குகள் நடத்தினால், அது மாணவிகளின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தாது என்பதால் அழிந்துவரும் கலைகளில் ஒன்றான பொம்மலாட்டம் மூலம் பள்ளிகளில் வளர் இளம் பெண்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.

விருதுநகர் மாவட்டத்தில் பள்ளியில் பயிலும் வளர் இளம் பெண்களின் இடைநின்றல் சதவிகிதம் அதிகமாகிவரும் ஸ்ரீவில்லிபுத்தூர் கல்வி மாவட்டத்திலுள்ள பல்வேறு பள்ளிகளிலும், கிராமப் பொதுமக்கள் முன்னிலையிலும் பொம்மலாட்டம் மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

ஸ்ரீவில்லிபுத்தூரிலுள்ள நீட்ஸ் தொண்டு நிறுவன நிர்வாகி ராஜகோபால் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து வழங்குகிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், அரசுப் பள்ளிகளில் வளர் இளம் பெண்கள் இடைநிற்றல் அதிகரித்து வருகிறது. பலர் குடும்பச் சூழல் காரணமாக வேலைகளுக்கு அனுப்பப்படுகிறார்கள். ஆனால், குழந்தை எங்கு வேலை செய்கிறது, என்ன வேலை செய்கிறது என்பதும்கூட பல பெற்றோருக்குத் தெரிவதில்லை. வளர் இளம்பெண்களுக்கும் தங்களது உரிமைகள் குறித்த புரிதலோ அல்லது விழிப்புணர்வோ இல்லை. இதனால், பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி பல்வேறு பிரச்சினைகளைச் சந்திக்க வேண்டியுள்ளது.

எனவே, படிக்கும் பருவத்தில் வளர் இளம் பெண்களுக்கு கல்வி கற்பதில் உள்ள உரிமை உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் குறித்தும், படிக்காமல் வேலைக்குச் செல்வதால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவே இந்த பொம்மலாட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. பள்ளி மாணவிகளிடமும், கிராம மக்களிடமும் இது நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்றார். மேலும், விருதுநகர் மாவட்டத்தைத் தொடர்ந்து மதுரை, தேனி, புதுக்கோட்டை மாவட்டங்களிலுள்ள அரசுப் பள்ளிகளிலும் வளர் இளம் பெண்களுக்காக இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அடிப்படை உரிமைகள் குறித்த விழிப்புணர்வை வளர் இளம் பெண்கள் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் மறக்கப்பட்டுவரும் பொம்மலாட்டத்துக்கும் அதை நம்பியுள்ள கலைஞர்களுக்கும் வாழ்வு அளிக்கும் வகையிலும் நடத்தப்படும் விழிப்புணர்வு நிகழ்ச்சி பாராட்டுக்குரியதே

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x