

திருவண்ணாமலை: ‘நீட்’ தேர்வை ரத்து செய்தால்தான் கிராமப்புற மாணவர்களால் மருத் துவராக முடியும் என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை அண்ணா மலையார் கோயில் மாட வீதியில் நடைபெற்று வரும் சிமென்ட் சாலை அமைக்கும் பணி மற்றும் ஐயங்குளம் தூர்வாரும் பணியை பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று பார்வையிட்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “அண்ணா மலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு ஐயங்குளத்தில் 3 நாட்கள் தெப்பல் உற்சவம் நடைபெறும். ஐயங்குளமானது 320 அடி அகலம், 320 அடி நீளம் என 3 ஏக்கர் பரப்பளவில் சதுரமாகவும், 32 படிகளை கொண்டதாக உள்ளது. 5 மீட்டர் ஆழத்துக்கு சகதி (மண்) உள்ளது.
இந்த சேற்றில் சிக்கி 3 ஆண்டுகளுக்கு முன்பு ஆன்மிக தொண்டு செய்ய வந்த 4 பேர் உயிரிழந்தனர். எனவே, ஐயங்குளத்தை தூர் வாரும் பணி, இந்து சமய அறநிலையத் துறையின் அனுமதி பெற்று தூய்மை அருணை சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்றார்.
‘நீட்’ தேர்வில் கையொப்பமிட மாட்டேன் என ஆளுநர் ஆர்.என்.ரவி திட்டவட்டமாக தெரிவித்துள்ளாரே? என செய்தியாளர்கள் கேட்டபோது, அமைச்சர் எ.வ.வேலு கூறியதாவது, "தமிழக அரசு, முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் எங்களது கொள்கையை பொருத்தவரை நீட் தேர்வு என்பதை ரத்து செய்தால்தான் கிராமப்புற மாணவர்கள் படித்து மருத்துவராக முடியும்.
இதனால் தான், நுழைவு தேர்வை முன்னாள் முதல்வர் கருணாநிதி ரத்து செய்தார். மத்திய அரசின் கருத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். நீட் தேர்வை ரத்து செய்தால்தான் கிராமப்புற மாணவர்களால் மருத்துவராக முடியும் என்பதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி யாக உள்ளார்” என்றார்.
அப்போது சட்டப்பேரவைத் துணைத் தலைவர் கு.பிச்சாண்டி, ஆட்சியர் பா.முருகேஷ், திமுக மருத்துவரணி துணைத் தலைவர் கம்பன், திமுக தலைமை செயற் குழு உறுப் பினர் ஸ்ரீதரன், நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, நகர திமுக செயலாளர் கார்த்தி வேல் மாறன் உள்ளிட்டோர் உடனிருந் தனர்.