

சென்னை: சர்வதேச இளைஞர் தினத்தையொட்டி, சென்னை யுனிசெஃப் சார்பில் இளைஞர்களின் தாக்கம் குறித்த கருத்தரங்கம் சென்னை பரங்கிமலையில் நேற்று நடைபெற்றது. இதில், மத்திய இளைஞர் நலன், விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் சிங் தாகூர் மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
அப்போது அவர் பேசியதாவது: உலகெங்கிலும் உள்ள இளைஞர்கள் எந்த நாட்டையும், எந்தவொரு பிராந்தியத்தையும் சக்திவாய்ந்ததாக மாற்றக்கூடிய திறமை படைத்தவர்கள். அவர்கள்தான் ஒருநாட்டின் மிகப்பெரிய பங்குதாரர்கள். உலகளவில் அதிக இளைய சமுதாயத்தினரை கொண்டுள்ளதால், இந்தியா உலகின் இளைய நாடாக அறியப்படுகிறது.
இதனால் மற்ற நாடுகளைவிட நமது பங்கு முக்கியமானது. இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் எண்ணற்ற சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர். அவற்றை கூட்டு முயற்சியின் மூலம் வெல்லதயாராக வேண்டும். அதற்காக இளைஞர்கள் ஒரு துறையை தேர்ந்தெடுத்து, அதில் இலக்கை நிர்ணயித்து, அதனை செயல்படுத்த உழைக்க வேண்டும். இளைஞர்களின் பங்கு நம் நாட்டுக்கு மட்டுமின்றி உலக மக்கள் அனைவருக்கும் பயன்பட வேண்டும்.
உலக நாடுகள் 2030-ம் ஆண்டுக்குள் காசநோய் இல்லாத உலகை உருவாக்க திட்டமிட்டுள்ள நிலையில், அதனை 2025-க்குள் நிறைவேற்ற இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது. உலக பொருளாதாரத்தில் அடுத்த 3 ஆண்டுகளில் இந்தியா 3-வது இடத்துக்கு முன்னேறிவிடும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்வில் மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை இணை செயலர் நிதேஷ் குமார் மிஸ்ரா, யுனிசெப் இந்தியாவின் பிரதிநிதி சிந்தியா மெக்காஃப்ரி, யுனிசெப் ‘யுவா’ தலைவர் துவாரகா ஸ்ரீராம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.