

மதுரை: தொகுப்பூதிய செவிலியர்களுக்கு வழங்கப்பட்ட மகப்பேறு விடுமுறைக் கால ஊதியத்தை திரும்ப வசூலிக்கும் சுற்றறிக்கைக்கு இடைக்காலத் தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிவகங்கையைச் சேர்ந்த சந்தானலெட்சுமி, உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு: சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தேசிய சுகாதாரத் திட்டத்தில் தொகுப்பு ஊதிய பணியாளராக 2018-ல் நியமிக்கப்பட்டேன். 2020-ல் திருமணம் நடந்தது. 2021-ல் 9 மாதங்கள் மகப்பேறு விடுப்பு எடுத்தேன். அக்காலத்தில் ஊதியம் வழங்கப்பட்டது.
இந்நிலையில் தேசிய சுகாதாரத் திட்ட இயக்குநர், அனைத்து அரசு மருத்துவமனை, மருத்துவக் கல்லூரிகளில் பணிபுரியும் தொகுப்பூதிய பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட மகப்பேறு விடுப்பு கால ஊதியத்தை உடனடியாக திரும்ப பெற்று கருவூலத்தில் செலுத்த உத்தரவிட்டுள்ளார். இந்த நடவடிக்கை சட்டவிரோதம். பெண் பணியாளர்களுக்கு ஊதியத்துடன் மகப்பேறு விடுப்பு வழங்க உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் பல்வேறு வழக்குகளில் உத்தரவிட்டுள்ளன.
எனவே தேசிய சுகாதார திட்ட அலுவலகம் 2.5.2023-ல் பிறப்பித்த சுற்றறிக்கையை ரத்து செய்தும், அதுவரை அந்த அறிக்கைக்கு தடை விதித்தும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.
பதிலளிக்க உத்தரவு: இந்த மனுவை நீதிபதி எல். விக்டோரியா கவுரி விசாரித்து, தேசிய சுகாதாரத் திட்ட இயக்குநர் வெளியிட்ட சுற்றறிக்கைக்கு இடைக்கால தடை விதித்தும், மனு தொடர்பாக தமிழக சுகாதார துறை முதன்மைச் செயலாளர், மருத்துவம் மற்றும் கிராமப்புற சுகாதாரப் பணிகள் இயக்குநர், தேசிய சுகாதார திட்ட இயக்குநர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தார்.