Published : 13 Aug 2023 08:13 AM
Last Updated : 13 Aug 2023 08:13 AM

திருவாவடுதுறை ஆதீன சொத்து ஆக்கிரமிப்பை 12 வாரத்தில் அகற்ற வேண்டும் - உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை: திருவாவடுதுறை ஆதீன சொத்துகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை 12 வாரத்தில் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு: தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூரில் திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சொந்தமான பழமையான மகாலிங்க சுவாமி கோயில் உள்ளது. இந்த கோயிலில் பிரம்மஹத்தி தோஷ நிவர்த்தி பூஜை பிரசித்தி பெற்றது. இதற்காக பக்தர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கோயில் கண்காணிப்பாளர் ரூ.2 கோடி அளவில் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார்.

திருவாவடுதுறை ஆதீன மடத்துக்குச் சொந்தமான பிற கோயில்களிலும் இதுபோன்ற முறைகேடுகள் நடைபெறுகின்றன. இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி, தஞ்சாவூர் மாவட்டக் காவல் ஆய்வாளரிடம் புகார் அனுப்பினேன். இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. முதல்வரின் தனிப்பிரிவுக்கு மனு அனுப்பியும் பலனில்லை.

ஆதீன மடத்துக்குச் சொந்தமாக 28,504.33 ஏக்கர் நிலங்கள் உள்ளன. இதில், 222.84 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன. காசிதர்மம் பகுதியில் மடத்துக்குச் சொந்தமான 699.27 ஏக்கரில் 688.65 ஏக்கர் மட்டுமே மடத்தின் பெயரில் உள்ளது. மற்ற நிலங்கள் தனி நபர்களின் பெயர்களில் உள்ளன. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற 2021-ல் நீதிமன்றம் உத்தரவிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, நிதி முறைகேடு குறித்து விசாரிக்கவும், ஆக்கிரமிப்புகளை அகற்றவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

அதிகாரி பணி நீக்கம்: இந்த மனுவை விசாரித்து நீதிபதி ஆர்.மகாதேவன், ஜெ.சத்தியநாராயண பிரசாத் அமர்வு பிறப்பித்த உத்தரவு: கோயில் பூஜைகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் புகாரின்பேரில், சம்பந்தப்பட்ட அதிகாரி பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். தற்போது புகார் எதுவும் வரவில்லை எனக் கூறப்பட்டுள்ளது. மடத்துக்குச் சொந்தமான இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் சட்டப்படி அகற்ற வேண்டும். இந்த உத்தரவை 12 வாரத்தில் நிறைவேற்ற வேண்டும். உத்தரவு நிறைவேற்றப்பட்டது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யவேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x