Published : 21 Nov 2017 08:56 AM
Last Updated : 21 Nov 2017 08:56 AM

டெல்லி பல்கலை. பேராசிரியை நந்தினிக்கு மால்கம் ஆதிசேஷய்யா அறக்கட்டளை விருது: சென்னை பல்கலைக்கழகத்தில் இன்று வழங்கப்படுகிறது

டெல்லி பல்கலைக்கழக பேராசிரியை நந்தினி சுந்தருக்கு மால்கம் ஆதிசேஷய்யா அறக்கட்டளை விருது, சென்னையில் இன்று வழங்கப்படுகிறது.

கல்வி, பொருளாதாரம், தமிழ்ப் பணி என பல்வேறு துறைகளில் பங்களிப்பாற்றிய மால்கம் ஆதிசேஷய்யா, 1970-ல் மால்கம் மற்றும் எலிசபெத் ஆதிசேஷய்யா அறக்கட்டளையை நிறுவினார். இந்த அறக்கட்டளை சார்பில் வளர்ச்சித் துறையில் சாதனை புரிந்தோருக்கு ஆண்டுதோறும் விருது வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி, 2017-ம் ஆண்டுக்கான விருதுக்கு டெல்லி பல்கலைக்கழக சமூகவியல் துறை பேராசிரியை நந்தினி சுந்தர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். விருது வழங்கும் விழா, சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. விழாவில் சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் பி.துரைசாமி, பதிவாளர் இராம.சீனுவாசன், அறக்கட்டளையின் தலைவர் யு.சங்கர், நிர்வாக அறங்காவலரும் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியுமான எச்.பி.என்.ஷெட்டி, அறங்காவலர்கள் வி.கே.நட்ராஜ், கீதா ஸ்ரீதரன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். விருது பெறும் பேராசிரியை நந்தினி, மால்கம் ஆதிசேஷய்யா நினைவு சொற்பொழிவு ஆற்றுகிறார்.

கல்வியாளர், பொருளாதார நிபுணர், சிறந்த நாடாளுமன்றவாதி என பன்முகத்தன்மை வாய்ந்த மால்கம் ஆதிசேஷய்யா, 1910-ம் ஆண்டு வேலூரில் பிறந்தார். லண்டன் பொருளாதார கல்லூரியில் டாக்டர் பட்டம் பெற்ற ஆதிசேஷய்யா, கொல்கத்தா செயின்ட் பால்ஸ் கல்லூரியிலும் சென்னை கிறிஸ்தவக் கல்லூரியிலும் விரிவுரையாளராகப் பணியாற்றினார்.

1946-ல் யுனெஸ்கோவில் உதவி இயக்குநராகப் பணியில் சேர்ந்து, அதன் துணைப் பொதுச்செயலாளராக உயர்ந்தார். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் தொடங்க யுனெஸ்கோ மூலம் உதவினார். திருக்குறளை ஆங்கிலம், பிரெஞ்சு, சீன, ஸ்பானிஷ், ரஷ்ய, அரேபிய மொழிகளிலும் மொழிபெயர்க்க வைத்தார். தமிழையும் தமிழரின் பண்பாட்டு பெருமைகளையும் யுனெஸ்கோ மூலம் உலக அரங்குக்கு எடுத்துச் சென்றார்.

ராஜ்ய சபா உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார். அவரது ஆலோசனையின் அடிப்படையில்தான் தேசிய வயது வந்தோர் எழுத்தறிவு திட்டம் 1978-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தொலைதூரக் கல்வி, அறிவொளி இயக்கம், பருவத் தேர்வு ஆகியன மால்கம் ஆதிசேஷய்யா உருவாக்கிய கல்வித் திட்டங்கள் ஆகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x