

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் சாதிய வன்மத்துடன் வெட்டப்பட்டதில் பலத்த காயமடைந்த பள்ளி மாணவரையும், அவரது சகோதரியையும் தமிழக சட்டப் பேரவை தலைவர் மு. அப்பாவு, மாநில நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் அரசு மருத்துவமனையில் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.
அப்போது அமைச்சர் தங்கம் தென்னரசுவின் செல்போனில் தொடர்பு கொண்டு வீடியோ அழைப்பு மூலம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மாணவரின் தாயாருக்கு ஆறுதல் தெரிவித்தார். பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோருக்கு திமுக சார்பில் ரூ.2 லட்சம் நிதியுதவியையும் அமைச்சர் வழங்கினார்.
திருநெல்வேலி ஆட்சியர் கா.ப. கார்த்திகேயன், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சிலம்பரசன், எம்.எல்.ஏக்கள் அப்துல்வகாப், ரூபி மனோகரன், மருத்துவக் கல்லூரி முதல்வர் ரேவதிபாலன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது: பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் அண்ணண், தங்கை இருவரையும் தமிழக முதல்வர் சார்பில் சந்தித்து உடல் நலம் விசாரித்தேன். பாதிக்கப்பட்ட இருவருக்கும் முதல்வர் சார்பில் அனைத்து உதவிகளும் செய்யப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட மாணவரின் தாயாரிடம் முதல்வர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தமிழ்நாடு அரசு சார்பில் அனைத்து உதவிகளும் வழங்கப்படும். குழந்தைகளின் படிப்பு தடைபடாத வண்ணம் தேவையான உதவிகளை அரசு செய்யும். அரசு எப்போதும் உங்களுடன் இருக்கும் என ஆறுதல் தெரிவித்தார்.
இருவருக்கும் மருத்துவ மனையில் நல்ல முறையில் சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது. வன்கொடுமை சட்டத்தின்கீழ் பாதிக்கப்பட்ட இரு சிறுவர்களுக்கும் முதல் கட்ட நிவாரணத் தொகை உடனடியாக வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள நிவாரணத்தொகை விரைவில் வழங்கப்படும். தொடர்புடைய குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப்பட்டு அரசு கூர் நோக்கு இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட நபர்கள் வசிக்கும் பகுதியில் காவல் துறையின் மூலம் பாதுகாப்பு மற்றும் தொடர் கண்காணிப்பு மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எதிர்கால பாதுகாப்பு மற்றும் அவர்களின் கல்வியின் அவசியம் கருதி இருவரையும், திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை பகுதியில் அமைந்துள்ள சேவியர் மேல்நிலைப் பள்ளி மற்றும் மேரி சார்ஜன்ட் மேல் நிலைப் பள்ளியில் விடுதி வசதியுடன் தங்கி கல்வியை தொடர்வதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது போன்ற சம்பவம் மேலும் நடக்காமல் இருப்பதற்கு சிறப்பு கண்காணிப்புக் குழு வட்டார வாரியாக அமைக்கப்பட்டு மாணவர்கள் இடை நிறுத்தம் மற்றும் வகுப்புவாத பிரச்சினைகளை ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபடாதவாறு கண்காணிப்பதற்கு உடனடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பள்ளி மேலாண்மை குழுக்ககளின் பணி மற்றும் ஈடுபாட்டை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காயமடைந்ததை நேரில் பார்த்து அதிர்ச்சியில் இறந்த தாத்தாவின் குடும்பத்துக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து நிதி உதவி வழங்க பரிந்துரைக்கப் பட்டுள்ளது என்று தெரிவித்தார்.