நாங்குநேரி சம்பவத்துக்கு எதிர்வினைகள், ஆளுநர் ரவி Vs மாணவியின் தந்தை |  செய்தித் தெறிப்புகள் 10 @ ஆக.12, 2023

நாங்குநேரி சம்பவத்துக்கு எதிர்வினைகள், ஆளுநர் ரவி Vs மாணவியின் தந்தை |  செய்தித் தெறிப்புகள் 10 @ ஆக.12, 2023
Updated on
4 min read

நாங்குநேரி எதிரொலி: ஒரு நபர் குழு அமைத்து முதல்வர் உத்தரவு: நாங்குநேரி சம்பவம் மூலம் சாதி, இனப் பிரச்சினைகளில் பள்ளி, கல்லூரி மாணவர்களில் சில பகுதியினர் தேவையற்ற வகையில் ஈடுபட்டு வருகின்றனர் என்ற கசப்பான உண்மை நமக்குத் தெரிய வருகிறது. இந்தச் சம்பவம் பற்றிக் கேள்விப்பட்டவுடன், நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவை பாதிக்கப்பட்ட மாணவர் மற்றும் அவரது குடும்பத்தினரைச் சந்தித்து, ஆறுதல் கூறி வர அனுப்பி வைத்தேன். பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அம்மாணவனின் உயர் கல்விச் செலவு முழுவதையும் அவரே ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளார்.

இளைய சமுதாயத்தினரிடையே சாதி, இன உணர்வு பரவியிருப்பது எதிர்காலத் தமிழகத்தின் நலனுக்கு உகந்ததல்ல. இது உடனடியாக சரி செய்யப்பட வேண்டிய ஒரு முக்கியமானப் பிரச்சினை என்பதால், இதில், அரசு எந்த வகையான நடவடிக்கைகளை மேற்கொள்வது என்பது குறித்தும், பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே சாதி, இனப் பிரிவினைகள் இல்லாத ஒரு சூழ்நிலையை உருவாக்கிட மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், அரசுக்கு ஆலோசனைகளை வழங்கிட ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் ஒரு நபர் குழு அமைத்திட உத்தரவிட்டுள்ளேன்.

இந்தக் குழு, மேற்படி பொருள் தொடர்பாக கல்வியாளர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், சமூக சிந்தனையாளர்கள், பத்திரிகைத் துறையினர் என பல்வேறு தரப்பினரிடமிருந்தும் கருத்துகளைப் பெற்று அதனடிப்படையில் அரசுக்கு விரைவில் அறிக்கை சமர்ப்பித்திடும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

இதனிடையே, நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் சாதிய வன்மத்துடன் வெட்டப்பட்டதில் படுகாயமடைந்த பள்ளிச் சிறுவனையும் அவரது சகோதரியையும் சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு, அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் நெல்லை அரசு மருத்துவமனைக்கு சனிக்கிழமை நேரில் சென்று பார்த்து ஆறுதல் தெரிவித்தனர். அப்போது, அமைச்சர் தங்கம் தென்னரசு தொலைபேசியில் தொடர்பு கொண்டு வீடியோ கால் மூலம், முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சிறுவனின் தாயாருக்கு ஆறுதல் தெரிவித்தார். சிறுவனின் தாயாரிடமும் பேசினார்.

நாங்குநேரி சம்பவம்: தலைவர்கள் கருத்து: “அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மட்டும் நாங்குநேரி போன்ற சம்பவங்கள் நடப்பது ஏன் என்பதை விளக்குவாரா பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்? திமுகவினர் நடத்தும் தனியார் பள்ளிகளில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்க முடிகிறது என்றால் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் மட்டும் ஏன் தடுக்க முடியவில்லை?" என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

“எப்போதெல்லாம் திமுக ஆட்சி நடைபெறுகிறதோ, அப்போதெல்லாம் சாதி, இன மோதல்கள் நடைபெறுவது வழக்கமாக உள்ளது. சாதி மோதல்களைத் தடுக்க, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து கடுமையாக எச்சரிக்க வேண்டும். அதன்மூலம் சாதி, இன மோதல்களின் ஆரம்பப் புள்ளியினை கண்டுபிடித்து, முளையிலேயே அகற்றிட வேண்டும்" என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

“நாங்குநேரியில் நடந்தது போன்ற கொடூரம் இனி தமிழகத்தில் எங்கும் நடக்காமல் இருப்பதை உறுதி செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தக் கொடிய குற்றத்தில் தொடர்புடையவர்கள் மீதும், அதன் பின்னணியில் உள்ளவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்" என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

நாங்குநேரி சம்பவம்: இறந்தவர் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதி: நாங்குநேரியில் அண்ணன், தங்கை அரிவாளால் தாக்கப்பட்ட சம்பவத்தை நேரில் பார்த்த அதிர்ச்சியில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், அவரின் குடும்பத்துக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.3 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

நீட் விலக்கு மசோதாவில் கையெழுத்திட மாட்டேன்: ஆளுநர் ஆர்.என்.ரவி திட்டவட்டம்: நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்து ஒருபோதும் கையெழுத்திடமாட்டேன் என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், ‘எண்ணித் துணிக’என்ற தலைப்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சிக்கு, 2023-ம் ஆண்டில் நீட் தேர்வில் 600 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற மாணவர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். இந்நிகழ்வில் கலந்துகொண்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுடன் ஆளுநர் கலந்துரையாடினார். அப்போது சேலத்தைச் சேர்ந்த மாணவியின் தந்தை ஒருவர், தமிழக அரசின் நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு எப்போது விலக்கு அளிப்பீர்கள்? என்று கேள்வி எழுப்பினார்.

அதற்குப் பதிலளித்த ஆளுநர், "நீட் தேர்வுக்கு தடை கோருவதை ஒருபோதும் நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்து கையெழுத்திடமாட்டேன். கல்வி பொதுப் பட்டியலில் இருப்பதால், குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வைப் பொறுத்தவரை, பயிற்சி மையங்களுக்குச் சென்றுதான், அதில் வெற்றிபெற வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை.

பள்ளியில் படிக்கும்போதே, ஆழமாக கவனித்துப் படித்தால் நீட் தேர்வில் வெற்றி பெறலாம். ஒவ்வொரு முறையும், நீட் தேர்வுக்கு விலக்கு கோருவது மாணவர்களின் கற்றல் திறனையே கேள்விக்குறியாக்கிவிடும். அதேபோல், நீட் தேர்வு குழுவின் அறிக்கையின்படி, நீட் தேர்வு நடைமுறைக்கு வரும் முன்பு மருத்துவ மாணவர் சேர்க்கையில், அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவானதாகவே இருந்தது. நூற்றுக்கும் குறைவான மாணவர்களே மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்து மருத்துவப் படிப்பை படித்துள்ளனர். ஆனால், நீட் தேர்வு நடைமுறைக்கு வந்தபின்புதான், அதிகளவில் அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவ இடங்களைப் பெற்றுள்ளனர்” என்று அவர் பதிலளித்தார்.

இதனிடையே இந்நிகழ்ச்சிக்குப் பின்னர் ஆளுநர் மாளிகை வெளியே செய்தியாளர்களைச் சந்தித்த அந்த மாணவியின் தந்தை, பள்ளிக்கூடங்களில் சொல்லித் தரப்படும் பாடங்களின் அடிப்படையில், நீட் தேர்வில் மாணவர்கள் தேர்ச்சிப் பெறவே இல்லை. அதன் பின்னணியில் ஒரு சதி இருக்கிறது. நீட் தேர்வுக்குப் பின்னால், ஒவ்வொரு பள்ளியும், தனியார் நிறுனங்களுடன் இணைந்துதான், நீட் தேர்வுக்கும் மாணவர்களை தயார் செய்து வருகின்றனர்.

என் மகள் ஜெயித்துவிட்டார். அதேபோல் ஜெயித்த நூறு பேரை அழைத்து இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. ஒவ்வொரு வருடமும் ஒவ்வொர் பெற்றோர் எவ்வளவு செலவு செய்துள்ளனர் என்று கேளுங்கள். அந்தச் செலவு யாருக்கு செய்யப்பட்டது என்று கேளுங்கள். அரசுப் பள்ளி மாணவர்கள் 652 பேர் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துவிட்டதாக ஆளுநர் கூறுகிறார். அவர்கள் எப்படி சேர்க்கைப் பெற்றனர். 7.5 சதவீத இடஒதுக்கீட்டால்தான் சேர்ந்தார்களே தவிர நீட் தேர்வால் சேர்க்கை பெறவில்லை என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

எதிர்க்கட்சிகள் பயத்தில் வெளிநடப்பு: பிரதமர் மோடி கிண்டல்: நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பின்போது எதிர்க்கட்சிகள் பயத்தில் வெளிநடப்பு செய்தன என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

பழங்குடியின மக்களை நான் நேசிக்கிறேன்: ராகுல் காந்தி: உதகையில் தோடர் பழங்குடியின மக்கள் வசிக்கும் முத்தநாடு மந்துக்கு வருகை தந்த காங்கிரஸ் முன்னாள் தலைவரும், வயநாடு எம்பி.யுமான ராகுல் காந்தி, அங்கு தோடரின மக்களைச் சந்தித்துப் பேசினார். அங்கிருந்து வயநாடு புறப்படும் போது, அவரது பயணம் குறித்து கேட்டதற்கு, ‘நான் பழங்குடியின மக்களை நேசிக்கிறேன். அவர்களை சந்தித்தது இனிமையான தருணம்’என்று கூறினார்.

செந்தில் பாலாஜிக்கு ஆக.25 வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு: சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை வரும் ஆகஸ்ட் 25-ம் தேதி வரை நீடித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, செந்தில் பாலாஜியை காவலில் எடுத்திருந்த அமலாக்கத்துறை அவரது நீதிமன்ற காவல் சனிக்கிழமையுடன் முடிவடைந்ததைத் தொடர்ந்து, சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு செந்தில் பாலாஜியை நேரில் ஆஜர்படுத்தினர். மேலும் 5 நாட்கள் நடத்திய விசாரணை குறித்த குற்றப்பத்திரிகையை அமலாக்கத் துறையினர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். அதையடுத்து, நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டதால், செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

அங்கன்வாடி மைய அடிப்படை வசதிகள்: ஆட்சியர்களுக்கு கடிதம்: தமிழகம் முழுவதும் உள்ள அங்கன்வாடி மையங்களை ஆய்வு செய்து, அடிப்படை வசதிகள் உள்ளனவா என்பதனை உறுதி செய்து உரிய மேல் நடவடிக்கை எடுக்க அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா கடிதம் அனுப்பியுள்ளார்.

திருப்பதி மலைப்பாதையில் சிறுத்தை தாக்கி 6 வயது சிறுமி உயிரிழப்பு: திருப்பதியிலிருந்து திருமலைக்கு செல்லும் மலைப்பாதையில் வெள்ளிக்கிழமை இரவு தனது குடும்பத்தாருடன் நடந்து சென்றுக்கொண்டிருந்த 6 வயது சிறுமியை, சிறுத்தை திடீரென இழுத்துச் சென்று, அடித்து கொன்றுள்ளது. இந்த சம்பவத்தால் பக்தர்கள் திருமலைக்கு நடைபாதை வழியாக இரவில் செல்ல அச்சம் தெரிவித்துள்ளனர். கடந்த 2 மாதங்களுக்கு முன் பெற்றோருடன் இதே போன்று திருமலைக்கு மலையேறி சென்றுக்கொண்டிருந்த 3 வயது சிறுவனை சிறுத்தை கவ்விக்கொண்டு ஓடியது நினைவுகூரத்தக்கது. இதைத்தொடர்ந்து மலையில் உள்ள நடைபாதையில் இருபுறமும் இரும்பு வேலி அமைக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பச்சை நிற 5 லிட்டர் பால் பாக்கெட்டுகள் விலை உயர்வா? - ஆவின் விளக்கம்: ஆவின் பச்சை நிற 5 லிட்டர் பால் பாக்கெட்டுகள் விலை அதிகரிக்கப்பட்டதாக வெளியான செய்தி தொடர்பாக நிர்வாகம் விளக்கமளித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், பொது மக்களுக்கு ஒரு லிட்டர் ரூபாய் 44 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால் வணிக நிறுவனத்துக்காக விற்பனை செய்யப்படும் ஐந்து லிட்டர் பால் ரூபாய் 210க்கு விற்பனை செய்யப்பட்டது. உண்மையில் பொதுமக்களின் பயன்பாட்டில் உள்ள அதே விலையை வணிக பயன்பாட்டு நிறுவனங்களுக்கும் வழங்கவே வணிக நிறுவனங்களுக்கான விலை ரூ.210 லிருந்து 220 ஆக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது என அந்த விளக்கத்தில் தெரிவித்துள்ளது.

“ஊழலை ஒழிப்பது புனிதமான கடமை” - பிரதமர் மோடி உரை: “ஊழலை ஒழிப்பது மக்களுக்கான அரசின் புனிதமானக் கடமையாகும்” என்று கொல்கத்தாவில் நடைபெற்ற ஜி20 ஊழல் எதிர்ப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் உரையாற்றினார்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in