நாங்குநேரி சம்பவத்தை நேரில் பார்த்த அதிர்ச்சியில் இறந்தவர் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதி: முதல்வர் அறிவிப்பு

நாங்குநேரியில் அண்ணன் தங்கை மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து நடந்த சாலை மறியல் போராட்டம் | கோப்புப்படம்
நாங்குநேரியில் அண்ணன் தங்கை மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து நடந்த சாலை மறியல் போராட்டம் | கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: நாங்குநேரியில் அண்ணன், தங்கை அரிவாளால் தாக்கப்பட்ட சம்பவத்தை நேரில் பார்த்த அதிர்ச்சியில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், அவரின் குடும்பத்துக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.3 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி வட்டம் மற்றும் கிராமத்தைச் சேர்ந்த அம்பிகா என்பவரது பள்ளி மாணவர்களான மகன் மற்றும் மகள் ஆகிய இருவரையும் கடந்த 9-8-2023 அன்று அரிவாளால் தாக்கப்பட்ட சம்பவத்தை நேரில் பார்த்த அவர்களது உறவினர் கிருஷ்ணன் (59) என்பவர் அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

உயிரிழந்த கிருஷ்ணனின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவரின் குடும்ப சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு மூன்று லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன், என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, நாங்குநேரி சம்பவத்தைக் கண்டித்து பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் அப்பகுதியை சேர்ந்தவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீஸார் அங்குவந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இந்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அண்ணன், தங்கையின் உறவினர் கிருஷ்ணன் (59) என்பவர் திடீரென்று சாலையில் மயங்கி விழுந்தார். அவரை அங்கிருந்தவர்கள் இருசக்கர வாகனத்தில் ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இதனிடையே, இளைய சமுதாயத்தினரிடையே சாதி, இன உணர்வு பரவும் பிரச்சினையில் அரசு எந்த வகையான நடவடிக்கைகளை மேற்கொள்வது என்பது குறித்தும்,
பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே சாதி, இனப் பிரிவினைகள் இல்லாத ஒரு சூழ்நிலையை உருவாக்கிட மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், அரசுக்கு ஆலோசனைகளை வழங்கிட ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் ஒரு நபர் குழு அமைத்திட உத்தரவிட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். | அதன் விவரம்: நாங்குநேரி சாதி வன்முறை எதிரொலி: கே.சந்துரு தலைமையில் ஒரு நபர் குழு அமைத்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in