Published : 12 Aug 2023 06:07 AM
Last Updated : 12 Aug 2023 06:07 AM

நாட்டிலேயே முதன்முறையாக ஜிப்மரில் ரோபோடிக் முறையில் சிக்கலான கணைய அறுவை சிகிச்சை

புதுச்சேரி: நாட்டிலேயே முதன்முறையாக புதுவை ஜிப்மர் மருத்துவமனை குடலியல் அறுவை சிகிச்சை துறையில், கணைய புற்று நோய்க்கான சிக்கலான அறுவை சிகிச்சைரோபோடிக் முறையில் செய்யப் பட்டது.

இதுதொடர்பாக ஜிப்மர் குடலியல் அறுவை சிகிச்சைத்துறை தலைவர் டாக்டர் கலையரசன் கூறியதாவது: 38 வயதான பெண் ஜிப்மர் மருத்துவமனையில் வயிற்று வலி பிரச்சினைக்காக அனுமதிக்கப் பட்டார். சிடி ஸ்கேனில் அவருக்கு கணைய புற்று நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அந்த புற்றுநோய் கல்லீரல் மற்றும் இரைப்பைக்கு ரத்தம் கொண்டு செல்லும் சீலியாக் ஆக்ஸிஸ் எனப்படும் ரத்த நாளத்தை பாதித்திருப்பது தெரிந்தது.

புற்றுநோய் தீவிர நிலையில் இருந்ததால் முதலில் அவருக்கு புற்றுநோய் எதிர்ப்பு மருந்து கொடுக்கப்பட்டது. மூன்று சுற்று சிகிச்சைக்குப் பிறகு புற்றுநோய் அளவு சிறிதளவு குறைந்தது. இருப்பினும் புற்று நோயால் பாதிக்கப்பட்ட ரத்த நாளத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை. இதனால் அறுவை சிகிச்சை நிபுணர்கள் கணையம் (முக்கால் அளவு), மண்ணீரல் மற்றும் சீலியாக்ஆக்ஸிஸ் எனப்படும் ரத்த நாளம் எடுக்கும் அறுவை சிகிச்சையை செய்ய முடிவு செய்தனர்.

இந்த அறுவை சிகிச்சையின் முக்கியமான பகுதி கல்லீரல் மற்றும் இரைப்பைக்கு ரத்தம் செல்வதில் எந்த பாதிப்பும் இல்லாமல் பார்த்துக் கொள்வது. பொதுவாக இந்த அறுவை சிகிச்சை 25 முதல் 30 செ.மீ அளவுக்கு வயிற்று சுவர் பகுதி கிழிக்கப்பட்டு திறந்த முறையில் (ஓபன் சர்ஜரி) செய்யப்படும்.

ஜிப்மர் குடலியல் அறுவை சிகிச்சை தலைவர் டாக்டர் கலையரசனாகிய நானும், டாக்டர் பிஜூ போட்டாக்கட் உடன் இணைந்து இந்த சிக்கலான 10 மணி நேர அறுவை சிகிச்சையை சிறு துவாரங்கள் மூலமாக ரோபோடிக் முறையில் செய்தோம். மயக்க மருந்து துறைத்தலைவர் டாக்டர் லெனின் பாபு அறுவை சிகிச்சைக்கு துணை புரிந்தார். இந்த அறுவை சிகிச்சை ரோபோடிக் முறையில் செய்யப்பட்டதால் அறுவை சிகிச்சையால் ஏற்படும் வலி மற்றும் பிற பாதிப்புகள் குறைவாக இருந்தது. அதன் காரணமாக சிகிச்சை முடிந்த ஆறாவது நாளே நோயாளி முழுவதுமாக குணமாகி வீடு திரும்பினார் என்று குறிப்பிட்டார்.

இதுபற்றி ஜிப்மர் இயக்குநர் ராகேஷ் அகர்வால், மருத்துவ கண்காணிப்பாளர் துரைராஜன் ஆகியோர் கூறுகையில், “சிக்க லான இந்த அறுவை சிகிச்சை உலகில் சில மருத்துவமனைகளில் மட்டுமே ரோபோடிக் முறையில் செய்யப்படுகிறது. இந்தியாவில் முதன்முறையாக இந்த கணையஅறுவை சிகிச்சை ரோபோடிக்முறையில் இங்கு செய்யப்பட்டுள் ளது. இதுவரை ஜிப்மர் மருத்துவமனையில் 1400-க்கும் மேற்பட்ட பல்வேறு அறுவை சிகிச்சை ரோபோடிக் முறையில் செய்யப்பட் டுள்ளன” என்று தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x