

புதுச்சேரி போலீஸாரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, அதிலிருந்து மீண்டு போராடிய அத்தியூர் விஜயா (38) வெள்ளிக்கிழமை இறந்தார்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே அத்தியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மாசி. பழங்குடி இனத்தைச் சேர்ந்த இவர், அனந்தபுரம் போலீஸாருக்கு “இன்பார்மராக” செயல்பட்டு வந்தார். கடந்த 1993-ம் ஆண்டு ஜூலை 29-ம் தேதி புதுவை போலீஸாரால் மாசி குடும்பத்தில் பிரச்சினை உருவானது. 17 வயதான மாசியின் மகள் விஜயா அன்று இரவு அனந்தபுரம் அருகே உள்ள சித்தரசூர் கிராமத்திலுள்ள உறவினர் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார்.
சுமார் இரவு 11 மணியளவில் புதுச்சேரி போலீஸார் நல்லாலம் கிருஷ்ணராய பாபு, ராஜாராம், சசிகுமார் நாயர், முனுசாமி, சுப்ரமணியன், பத்மநாபன் ஆகிய 6 பேர் ஒரு ஜீப்பில் வந்து, திருட்டு வழக்கில் தொடர்புடைய வெள்ளையன் என்பவரை அடையாளம் காட்டச் சொல்லி விஜயாவை வலுக்கட்டாயமாக அத்தியூருக்குச் அழைத்துச் சென்றனர். அங்கு சென்ற பிறகு மாசியையும் அவரது மனைவி தங்கம்மாளையும் உடன் அழைத்துக்கொண்டு வெள்ளையன் பதுங்கி இருக்கும் வெள்ளாமை கிராமத்திலுள்ள மலையடிவார வயலுக்குச் சென்றனர். ஜீப்பிலேயே விஜயாவின் பெற்றோரை விட்டுவிட்டு விஜயாவை அழைத்து சென்ற போலீஸார் 6 பேரும், அந்த பெண்ணை பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது.
நடந்த சம்பவங்களை அனந்தபுரம் போலீஸில் விஜயாவின் பெற்றோர் சொல்லியபோது தரக்குறைவாக பேசி விரட்டியடிக்கப்பட்டனராம். பத்திரிகைகள் மூலம் செய்தியை அறிந்த திண்டிவனம் சார் ஆட்சியர் நேரில் விசாரணை மேற்கொண்டார். அதைத் தொடர்ந்து 15 நாட்களுக்கு பிறகு அனந்தபுரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
தொடர்ந்து நியூ எஜூகெஷன் லிபரேஷன் தொண்டு நிறுவனம் மற்றும் பேராசிரியர் கல்யாணி, லூசினா ஆகியோர் விஜயாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.
வழக்கை விசாரித்த விழுப்புரம் நீதிமன்றம், குற்றம் சுமத்தப்பட்ட நல்லாலம் கிருஷ்ணராய பாபு, ராஜாராம், சசிகுமார் நாயர், முனுசாமி, சுப்பரமணியன், பத்மநாபன் ஆகியோருக்கு 11.8.2006-ல் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தது. தீர்ப்பு அறிவிப்பதற்கு முதல் நாள் வரை குற்றவாளிகள் யாரும் கைது செய்யப்படவில்லை. வழக்கு நடைபெறும் காலங்களில் தற்காலிக பணிநீக்கம்கூட செய்யப்படவில்லை.
உயர் நீதிமன்றத்தில் விடுதலை
இதன்பின் இவ்வழக்கு மேல்முறை யீடு செய்யப்பட்டு 19.9.2008-ல் குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும் சென்னை உயர் நீதிமன்றம் விடு தலை செய்தது. உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வசதி இல்லாததால் விதி விட்ட வழி என மவுனமானார் விஜயா.
6 பேர் விருப்ப ஓய்வு
மேல்முறையீடு செய்யப்பட்டால் பணி ஓய்வு மற்றும் ஒய்வூதிய பணப் பலன்களில் சிக்கல் ஏற்படும் என்பதால் விடுதலையான சில நாட்களிலேயே 6 போலீஸாரும் விருப்ப ஓய்வு பெற்றனர். பின்னர் இவர்களில் ஒருவர் விபத்தில் இறந்தார்.
இதற்கிடையே திண்டிவனம் காவேரிபாக்கத்தைச் சேர்ந்த அன்புகுமார் என்பவரை திருமணம் செய்துகொண்ட விஜயா, தன் சொந்த ஊரான அத்தியூரில் கூலிவேலை செய்து வாழ்க்கை நடத்தி வந்தார். கடந்த சில மாதங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த விஜயா, வெள்ளிக்கிழமை காலை இறந்தார். மாலையில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.
விஜயாவின் இறுதிச் சடங்கில் பழங்குடி இருளர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் கல்யாணி, வழக்கறிஞர் ஷெரீப், புதுவை மனித உரிமை ஆர்வலர் சுகுமாரன், லூசினா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அத்தியூர் விஜயா