30 வயதுக்கு மேல் உள்ள அனைவருக்கும் சர்க்கரை நோய் பரிசோதனை அவசியம்: சுகாதாரத் துறை அமைச்சர் வலியுறுத்தல்

30 வயதுக்கு மேல் உள்ள அனைவருக்கும் சர்க்கரை நோய் பரிசோதனை அவசியம்: சுகாதாரத் துறை அமைச்சர் வலியுறுத்தல்
Updated on
2 min read

30 வயதுக்கு மேல் உள்ள அனைவருக்கும் சர்க்கரை நோய் பரிசோதனை அவசியம் என்று சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வலியுறுத்தியுள்ளார்.

உலக சர்க்கரை நோய் தினத்தை முன்னிட்டு, சென்னை அரசு பொது மருத்துவமனை - சென்னை மருத்துவக் கல்லூரியில் (எம்எம்சி) விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், சர்க்கரை நோய் விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்து மரக்கன்றுகளை நட்டார். 25 ஆண்டுகளுக்கு மேலாக முதலாம் வகை சர்க்கரை நோய் இருந்தும் சரியான தொடர் சிகிச்சை மூலம் நலமுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் 15 நபர்களுக்கு குளுக்கோமீட்டர் அடங்கிய பரிசுப் பெட்டகத்தை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் விஜயபாஸ்கர் பேசியதாவது:

உலக சர்க்கரை நோய் தினம், ஆண்டுதோறும் நவம்பர் 14-ம் தேதி கொண்டாடப்படுகிறது. உலகளவில் பெருகி வரும் சர்க்கரை நோயின் தாக்கத்தை மனதில் கொண்டு உலக சுகாதார நிறுவனம் மற்றும் சர்வதேச சர்க்கரை நோய் அமைப்பினால் இந்த தினம் 1991-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. ஐக்கிய நாடுகள் சபையால் 2007-ம் ஆண்டு முதல் உலக சர்க்கரை நோய் தினம் அங்கீகரிக்கப்பட்டது. உலக சர்க்கரை நோய் தினத்தின் இந்த ஆண்டுக்கான கருப்பொருள் “மகளிரும் நீரிழிவு நோயும் - ஆரோக்கியமான வருங்காலத்துக்கான நமது உரிமை” என்பதாகும்.

உலக அளவில் 41.5 கோடி பேரும், இந்தியாவில் 6.9 கோடி பேரும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது 2040-ம் ஆண்டில் உலக அளவில் 64.2 கோடியாகவும், இந்தியாவில் 10.9 கோடியாகவும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. தமிழகத்தில் 12 சதவீதம் பேர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் 30 வயதில் இருந்தே சர்க்கரை நோயின் தாக்கம் தொடர்கிறது. 30 வயதுக்கு மேல் உள்ளவர்கள் பரிசோதனை செய்து கொள்வதன் மூலமாக தங்களுக்கு சர்க்கரை நோய் இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ள லாம். இந்தியாவிலேயே தமிழக அரசு மட்டும்தான் முதலாம் வகை சர்க்கரை நோயாளிகளின் நலன் கருதி வீட்டிலேயே இன்சுலின் ஊசி போட்டுக் கொள்ள வசதியாக முழு இன்சுலின் பாட்டில்களை கட்டணமில்லாமல் வழங்குகிறது. இதன்மூலம் மாதம்தோறும் 1,400 பேர் பயன்பெற்று வருகின்றனர். அரசு ஸ்டான்லி மருத்துவமனை, அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவமனை, கோவை, மதுரை, சேலம் மற்றும் தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளிலும் சர்க்கரை நோய்க்கான உயர்நிலைத் துறை அமைக்கப்பட்டு நோயாளிகளுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்படுகிறது. சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் ரூ.7 கோடி மதிப்பில் 3 மாடிகள் கொண்ட சர்க்கரை நோய்க்கான தனித் துறை அமைக்கப்பட்டு விரைவில் திறக்கப்பட வுள்ளது.

இவ்வாறு அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மருத்துவக் கல்வி இயக்குநர் (டிஎம்இ) எட்வின் ஜோ, தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் சாந்தாராம், சென்னை அரசு பொது மருத்துவமனை டீன் நாராயணபாபு, மருத்துவக் கண்காணிப்பாளர் நாராயணசாமி, சர்க்கரை நோய் உயர்நிலைத் துறை இயக்குநர் தர்மராஜன் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in