பதைபதைக்க வைக்கும் வீடியோ - பள்ளி முடிந்து வீடு திரும்பிய சிறுமியை முட்டி தள்ளிய பசுமாடு

சிறுமியை மாடு முட்டும்  பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி.
சிறுமியை மாடு முட்டும் பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி.
Updated on
1 min read

சென்னை: பள்ளி முடிந்து தாயுடன் வீடு திரும்பிய சிறுமியை பசுமாடு ஒன்று முட்டித் தள்ளியது. இந்த விவகாரம் தொடர்பாக மாட்டின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுமியை மாடு முட்டும் பதைபதைக்க வைக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

சென்னை சூளைமேடு, காந்தி நகரைச் சேர்ந்தவர், அஸ்ரின் பானு (28). இவரது மகள் ஆயிஷா (9). இவர் அரும்பாக்கம் எம்எம்டிஏ காலனியில் உள்ள பள்ளி ஒன்றில் 4-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை 3.20 மணியளவில் வகுப்பு முடிந்து அஸ்ரின் பானு, தனது மகளை அழைத்துக் கொண்டு எம்எம்டிஏ காலனி, ஆர் பிளாக் பகுதியில் உள்ள மாநகராட்சி பூங்கா அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது, அந்த வழியாக 2 பசு மாடுகள் சென்று கொண்டிருந்தன. அதில், ஒன்று திடீரென ஆக்ரோஷமாகி சிறுமியைக் கொம்பால் தூக்கி வீசியது. இதில், நிலை குலைந்து சாலையில் சரிந்த சிறுமியை மாடு விடாமல் முட்டி தரையில் அழுத்தியது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த, தாய் அஸ்ரின் பானு, கத்தி கூச்சலிட்டதோடு, அந்த பகுதிகளில் கிடந்தகல்லை எடுத்து மாட்டின் மீது வீசினார்.

மேலும், குழந்தையின் அழுகுரல் மற்றும் கதறலைக் கேட்டு அந்த வழியாக வந்தவர்களும் ஒன்று சேர்ந்து கற்களை எடுத்து மாட்டின்மீது சரமாரியாக வீசினர். இருப்பினும் மாடு தொடர்ந்து சிறுமியை முட்டித் தள்ளியது.

மாட்டை அடித்து விரட்டினர்: ஒரு கட்டத்தில் ஒருவர் கட்டையால் மாட்டை அடித்து விரட்டினார். அதன் பிறகே மாட்டின் பிடியிலிருந்து சிறுமி தப்பினார். பின்னர் சிறுமி மீட்கப்பட்டு அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்நிலையில், சிறுமியை மாடு முட்டும் காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமரா ஒன்றில்பதிவாகியுள்ளது. அந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பார்ப்போரைப் பதைபதைக்க வைத்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து அரும்பாக்கம் போலீஸார் விசாரணை நடத்தினர். முதல் கட்டமாக மாட்டின் உரிமையாளரான அரும்பாக்கம், எம்ஜிஆர் தெருவைச் சேர்ந்த விக்கியை (26) போலீஸார் கைது செய்தனர். அவர் மீது கவனக் குறைவாக செயல்பட்டு உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துதல், வீட்டில் வளர்க்கும் விலங்கினால் மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துதல் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

மேலும், சிறுமியை முட்டிய பசுவை மாநகராட்சி ஊழியர்கள் பிடித்து வாகனத்தில் ஏற்றி பெரம்பூரில் உள்ள மாட்டுத் தொழுவத்தில் அடைத்தனர். சாலையில் மாடுகளை விடும் உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் எச்சரித்துள்ளனர்.

அமைச்சர் ஆறுதல்: மாடு முட்டி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சிறுமியை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in