

சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று மாலை திடீர் சாரல் மழை பெய்ததால், அப்பகுதிகளில் இரவு முழுவதும் குளிர்ச்சி நிலவியது. கடந்த 10 நாட்களாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடும் வெயில் வாட்டி வந்தது.
இந்நிலையில் தற்போது மேற்கு திசை காற்று வீச சாதகமான சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், நேற்று காலை முதலே சென்னை, புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாலை நேரத்தில் சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகள் மற்றும் புறநகர் பகுதிகளான திருவேற்காடு, ஆவடி, அம்பத்தூர், வானகரம் போன்ற பகுதிகளிலும் திடீர் சாரல் மழை பெய்தது.
மாலை நேரத்தில் பெய்த மழையால், வீட்டுக்கு செல்ல தயாரான பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் அரசு, தனியார் ஊழியர்கள் உள்ளிட்டோர் சிரமத்துக்குள்ளாயினர். இரு வாரங்களுக்கும் மேலாக வெப்பத்தால் தகித்து வந்த சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை திடீர் மழை குளிர்வித்து அனைவரையும் மகிழ்ச்சிக்குள்ளாக்கியது.