

கிருஷ்ணகிரி: ஊத்தங்கரை பாம்பாறு அணையில் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள வீடுகள் தரமில்லாமல் உள்ளதாக ஆய்வுக்கு சென்ற அதிகாரியிடம் அங்கிருந்த மக்கள் புகார் தெரிவித்தனர்.
ஊத்தங்கரை அருகே கொண்டாம்பட்டி ஊராட்சி பாம்பாறு அணை பகுதியில் இலங்கைத் தமிழர்கள் மறுவாழ்வு முகாம் உள்ளது. இந்த முகாமில் 184 குடும்பங்களைச் சேர்ந்த 585 பேர் வசித்து வருகின்றனர். இங்கு புதிய வீடுகள் கட்ட இலங்கைத் தமிழர் மறுவாழ்வு துறை மூலம் ரூ.1 கோடியே 85 லட்சத்து 65 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில், முதல்கட்டமாக 37 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. புதிய வீடுகளை இலங்கைத் தமிழர் மறுவாழ்வுத் துறை துணை ஆணையர் கோவிந்தசாமி நேற்று ஆய்வு செய்தார்.
அப்போது, அங்கிருந்த முகாம் மக்கள் கூறியதாவது: புதிதாகக் கட்டப்பட்டுள்ள வீடுகள் தரமற்ற முறையில் கட்டப்பட்டுள்ளன. திறப்பு விழாவுக்கு முன்பே வீடுகளின் மேற்கூரையில் நீர்க் கசிந்து, விரிசல் ஏற்பட்டுள்ளது. வீடுகளில் குளியல் அறை வசதி இல்லை. கழிவுநீர் செல்லும் கால்வாய்கள் தரமற்ற முறையில் அமைக்கப்பட்டுள்ளன.
கழிவுநீர் வெளியேற மாற்றுவழி எதுவும் செய்யவில்லை. கழிவு நீர்த் தொட்டிகளை, தரமற்ற முறையில் கட்டியுள்ளனர். செப்டிக் டேங்க் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இவற்றை முழுமையாகச் சரி செய்த பிறகே வீடுகளை வழங்க வேண்டும். இதுதொடர்பாக பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதையடுத்து, புதிய வீடுகளில் சுட்டிக்காட்டப்பட்ட குறைகளைப் பார்வையிட்ட இலங்கைத் தமிழர் மறுவாழ்வுத் துறை துணை ஆணையர் இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார். ஆய்வின்போது, ஊத்தங்கரை வட்டாட்சியர் திருமலை ராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர் சிவப்பிரகாசம், ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் உஷாராணி, பொறியாளர் நிஷார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.