Published : 25 Nov 2017 09:40 am

Updated : 25 Nov 2017 13:31 pm

 

Published : 25 Nov 2017 09:40 AM
Last Updated : 25 Nov 2017 01:31 PM

திமுகவுக்கு ஆதரவா? இடதுசாரிகள், வி.சி.கட்சி ஆலோசனை

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுகவை ஆதரிப்பதா வேண்டாமா என்பது குறித்து மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) ஆகியவை ஆலோசனை நடத்தி வருகின்றன.

ஆர்.கே.நகர் தொகுதியில் வரும் டிசம்பர் 21-ம் தேதி மீண்டும் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. கடந்த ஏப்ரல் 12-ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டபோது திமுக வேட்பாளர் என்.மருதுகணேஷுக்கு காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி ஆகியவை ஆதரவளித்தன. மக்கள் நலக் கூட்டணியில் இடம்பெற்றிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனியாக வேட்பாளரை அறிவித்தது. கட்சியின் ஆர்.கே.நகர் பகுதி செயலாளர் லோகநாதனை களத்தில் இறக்கியது. ஆனால் போட்டியிட வேண்டாம் என நிலை எடுத்த இந்திய கம்யூனிஸ்ட், விசிக ஆகியவை தேர்தலைப் புறக்கணித்தன.

ஆனால், தற்போது அரசியல் சூழ்நிலை முற்றிலும் மாறுபட்டுள்ளது. தேசிய அளவில் பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ், மற்றும் பாஜகவை எதிர்க்கும் மாநில கட்சிகளுடன் இணைந்து செயல்பட இடதுசாரி கட்சிகள் முடிவு செய்துள்ளன. மத்திய பாஜக அரசின் கட்டளைக்கு ஏற்ப முதல்வர் பழனிசாமி அரசு செயல்படுவதாக திமுக, காங்கிரஸ் மட்டுமல்லாது இடதுசாரி கட்சிகள், விசிக குற்றம்சாட்டி வருகின்றன.

எனவே அதிமுக, பாஜகவுக்கு எதிராக திமுகவுடன் இணக்கமாகவே கடந்த 6 மாதங்களாக இடதுசாரி கட்சிகள் செயல்பட்டு வருகின்றன. திமுகவுடன் இணைந்து விவசாயிகள் பிரச்சினை மற்றும் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்களில் இடதுசாரி கட்சிகள் பங்கேற்றன. முரசொலி பவள விழாவில் இடதுசாரி கட்சிகள், விசிக மட்டுமல்லாது மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும் பங்கேற்றார்.

எனவே, ஆர்.கே.நகரில் திமுகவை ஆதரிக்கலாமா என்பது குறித்து மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விசிக ஆகிய கட்சிகள் ஆலோசித்து வருகின்றன. இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணனிடம் கேட்டபோது, ‘‘ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் குறித்து வரும் 30-ம் தேதி நடைபெறும் மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு செய்வோம்’’ என்றார்.

‘தி இந்து’விடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், ‘‘ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதா அல்லது வேறு கட்சிகளை ஆதரிப்பதா என்பது குறித்து ஆலோசித்து முடிவெடுப்போம்’’ என்றார்.

விசிக தலைவர் தொல்.திருமாவளவனிடம் கேட்டபோது, ‘‘கடந்த ஏப்ரலில் தேர்தல் அறிவிக்கப்பட்டபோது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், விசிகவும் தேர்தலை புறக்கணித்தோம். தற்போது அரசியல் சூழ்நிலை முற்றிலும் மாறுபட்டுள்ளது. அதிமுகவும் - பாஜகவும் இணக்கமாக இருக்கும் சூழலில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, தேர்தலில் போட்டியிடுவதா, வேறு கட்சிகளை ஆதரிப்பதா, அல்லது தேர்தலைப் புறக்கணிப்பதா என்பது குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்து ஓரிரு நாளில் முடிவு செய்வோம்’’ என்றார்.

இடதுசாரி கட்சிகள், விசிகவின் ஆதரவைப் பெறுவதன் மூலம் அடுத்தடுத்து வரவுள்ள பொதுத்தேர்தல்களில் மெகா கூட்டணி அமைக்க முடியும் என திமுக நினைக்கிறது. எனவே, இடதுசாரி கட்சிகள், விசிகவின் ஆதரவைப் பெறுவதற்கான முயற்சியில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் ஈடுபடுவார் எனத் தெரிகிறது. கடந்த 6-ம் தேதி சென்னை வந்த பிரதமர் மோடி, திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து நலம் விசாரித்தார். இதனால் திமுகவையும் நம்ப முடியாது என இடதுசாரி கட்சிகளில் ஒரு பிரிவினர் கருதுவதாகக் கூறப்படுகிறது. இருப்பினும் வரும் 30-ம் தேதிக்குள் இறுதி முடிவை அறிவிப்பார்கள் எனக் கூறப்படுகிறது.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author