Published : 30 Nov 2017 11:55 AM
Last Updated : 30 Nov 2017 11:55 AM

கட் அவுட், பேனர்களுக்கு அரசு விதிமுறைகளை கட்டாயமாக்க பாஜக வலியுறுத்தல்: பொறியாளர் விபத்து சிசிடிவி ஆதாரத்தை வெளியிட திமுகவினர் மனு

கோவையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்காக அவிநாசி சாலையில் அமைக்கப்பட்ட அலங்கார வளைவில் மோதி ரகு என்ற பொறியாளர் பலியானார். இந்த சம்பவம் கோவையில் மட்டுமல்லாது தமிழகம் முழுக்க எதிரொலித்தது. அரசு நிதியில் அமைக்கப்பட்டுவரும் ஆபத்தான, விதிமீறல் பிளக்ஸ் பேனர்கள், கட் அவுட்டுகள் அகற்றப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டு வருகிறது.

பிளக்ஸ் பேனர் பிரச்சினை குறித்து

பாஜக தேசியச் செயலர் ஹெச்.ராஜா கூறும்போது, ‘சாலை போக்குவரத்துக்கும், மக்களுக்கும் இடையூறாக பிளக்ஸ் பேனர் வைக்கக்கூடாது என்பதே பாஜகவின் நிலைப்பாடு. ஆனால் பேனர்கள் வைக்கலாம், அதில் உயிரோடு உள்ள தலைவர்கள் படங்களை வைக்கக்கூடாது என்ற வகையில் நீதிமன்றம் கூறியிருப்பதே முரண்பாடாக உள்ளது. கட்- அவுட் கலாச்சாரம் தவறான முன்னுதாரணம். இது தவிர்க்கப்பட வேண்டியது’ என்றார்.

பாஜக மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் கூறும்போது,‘விபத்து குறித்து அரசு ஒருபுறம் விளக்கம் கொடுத்தாலும், இறந்த இளைஞரின் குடும்பத்துக்கு இழப்பீட்டைக் கொடுக்க வேண்டும். வரவேற்புக்காக, அலங்காரத்துக்காக போக்குவரத்தை பாதிக்கும் வகையில் வளைவுகள் அமைப்பது தவறு.

பேனர்களில் படங்கள் வைப்பதற்கு நீதிமன்றம் கட்டுப்பாடுகளை விதித்ததுபோல, ஒட்டுமொத்தமான கட் அவுட், பேனர்களுக்கும் அரசு விதிமுறைகளை கட்டாயமாக்க வேண்டும் அல்லது முழுமையாக தடை செய்ய வேண்டும். குறிப்பாக ஆளும் கட்சியினர் எந்த அளவுக்கு வேண்டுமானாலும் பேனர்களை வைக்கலாம் என்பது போன்ற சலுகைகள் தடை செய்யப்பட வேண்டும்’ என்றார்.

சிசிடிவி பதிவு

இதனிடையே விபத்து நடந்த இடத்தில் இருந்ததாகவும், விபத்து ஏற்படுத்திய லாரியை கண்டுபிடிக்க உதவியதாகவும் கூறப்படும் சிசிடிவி காட்சியை போலீஸார் வெளியிட வேண்டுமென திமுகவினர் வலியுறுத்தியுள்ளனர்.

திமுக வழக்கறிஞர் பி.ஆர்.அருள்மொழி கூறும்போது, ‘சிசிடிவி கேமரா பதிவு அடிப்படையில் விபத்துக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுத்ததாக போலீஸார் கூறினர். ஆனால், சட்ட ஆலோசனை பெற்றே சிசிடிவி காட்சியை வெளியிடுவோம் என்கிறார்கள். பல முக்கிய வழக்குகளின்போது வீடியோ பதிவுகளை போலீஸார் வெளியிட்டுள்ளனர். இதில் மட்டும் தாமதம் செய்வது ஏன். விபத்துக்கு காரணம் என்ன என்ற குழப்பம் நிலவுவதால், வீடியோவை வெளியிடாமல் இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தும்.

எனவே வீடியோ பிரதியை கேட்டு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மாநகர காவல் ஆணையருக்கு மனு அனுப்பியுள்ளோம்’ என்றார்.

தமிழகம் மாற வேண்டும்: இல. கணேசன்

பாஜக மூத்த தலைவரும், எம்பியுமான இல.கணேசன் கூறும்போது, ‘கோவையில் அலங்கார வளைவினால் ஏற்பட்ட உயிர்ப்பலி விபத்துதானா என்ற கேள்வியை எழுப்புகிறது. அதில் முழுமையான விசாரணை தேவை. அதேபோல கட்அவுட், பேனர்கள் வைப்பதில் நிச்சயம் வரைமுறைகள் தேவை. பல மாநிலங்களுக்கு சென்றிருக்கிறேன். ஆனால், தமிழகத்தைப்போல மக்களை பாதிக்கும் விளம்பரங்களை எந்த மாநிலத்திலும் பார்த்ததில்லை. தேர்தல் சமயங்களில் கூட அந்த நிலை இருக்காது. எனவே தமிழகம் நிச்சயம் மாறி ஆக வேண்டும். அதேசமயம், மறைந்த தலைவர்கள் படத்தை மட்டும் பேனர்களில் பயன்படுத்த வேண்டும் என்பதை சரியாக நடைமுறைப்படுத்த வேண்டும்’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x