Published : 29 Nov 2017 09:48 AM
Last Updated : 29 Nov 2017 09:48 AM

எரிந்த நிலையில் சிகிச்சைக்குசேர்க்கப்பட்ட இளைஞர் உயிரிழப்பு: கடலூர் மாவட்டத்தில் பதற்றம்; போலீஸ் குவிப்பு

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே எரிந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இளைஞர் உயிரிழந்தார். உறவினர்கள் உடலை வாங்க மறுத்ததால் பதற்றம் ஏற்பட்டு அங்கு போலீஸார் குவிக்கப்பட்டனர்.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே சாத்தாவட்டம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன் மகன் ஆனந்தன்( 22). ஐடிஐ படித்துள்ளார். இவரும், அதே பகுதியைச் சேர்ந்த துரைமுருகன், வினோத் ஆகியோரும் கடந்த தீபாவளி அன்று, அதே பகுதியில் உள்ள மற்றொரு பிரிவைச் சேர்ந்த செல்வராஜ் மகன் சிலம்பரசன், சோமசுந்தரம் ஆகியோரை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சிலம்பரசன் ஸ்ரீமுஷ்ணம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனால் அவர்களுக்குள் முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த 26-ம் தேதி ஆனந்தன் சாத்தாவட்டம் பேருந்து நிலையம் பகுதியில் நின்றிருந்தபோது, அங்கு வந்த சிலம்பரசன் உள்ளிட்ட சிலருடன் தகராறு ஏற்பட்டு அடிதடியாக மாறியுள்ளது. இதில் சிலம்பரசன் தரப்பினர் ஆனந்தனை தாக்கியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அன்றிரவு ஆனந்தன் மண்ணெண்ணெய் ஊற்றி எரிந்த நிலையில் சாத்தாவட்டம் பேருந்து நிலையம் அருகில் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டார். சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், ஆனந்தன், சிலம்பரசன் உள்ளிட்ட சிலர் தன்னை தாக்கியதாக ஸ்ரீமுஷ்ணம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

இதையடுத்து போலீஸார் சிலம்பரசன்(22), பூவரசன் (21) சுப்ரமணியன் (52) ஆகிய 3 பேரை கைது செய்தனர். மொத்தம் 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்து, மற்றவர்களை தேடி வருகின்றனர்.

இந்நிலையில் ஆனந்தன் மேல்சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பின்னர் அவர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு நேற்று காலை உயிரிழந்தார்.

இதையடுத்து, அவரது உறவினர்கள் உடலை வாங்க மறுத்து ஸ்ரீமுஷ்ணம் காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர். இதனால், சாத்தாவட்டம் பகுதியில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x