கரோனாவுக்கு பிறகு சுற்றுலாப் பயணிகள் வருகை குறைவு: படிப்படியாக மீளும் மதுரை சுற்றுலாத் துறை

கரோனாவுக்கு பிறகு சுற்றுலாப் பயணிகள் வருகை குறைவு: படிப்படியாக மீளும் மதுரை சுற்றுலாத் துறை

Published on

மதுரை: கரோனாவுக்குப் பிறகு மதுரையில் சுற்றுலாப் பயணிகள் வருகை கணிசமாக குறைந்துள்ள நிலையில், சுற்றுலாத் துறை மீண்டு வரத் தொடங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த நகராக மதுரை திகழ்கிறது. ஆன்மிக கோயில்களும், வரலாற்று முக்கியத்துவம் பெற்ற நினைவு சின்னங்களும் ஏராளம் உள்ளன. மீனாட்சியம்மன் கோயில், திருப்பரங்குன்றம் கோயில், அழகர் கோயில், காந்தி அருங்காட்சியகம், திருமலை நாயக்கர் மகால், தெப்பக்குளம் போன்றவை சுற்றுலாப் பயணிகளை கவர்ந்த இடங்களாக உள்ளது. ராமேசுவரம், கொடைக்கானல், கன்னியாகுமரி போன்ற சுற்றுலாத் தலங்களுக்கு வருவோர் மறவாமல் மதுரை வந்து செல்வார்கள்.

மேலும், சித்திரைத் திருவிழா, பொங்கல் விழாக்களைக் காணவும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் முதல் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் மதுரையில் திரள்வார்கள். கரோனா முன் வரை, மதுரைக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து சென்றார்கள். கரோனாவுக்கு பிறகு சுற்றுலாப் பயணிகள் வருகை அடியோடு குறைந்தது.

இதுகுறித்து சுற்றுலாத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: ''மதுரைக்கு கடந்த 2018ம் ஆண்டு 2 கோடியே 45 லட்சத்து 16 ஆயிரத்து 815 உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள், 2 லட்சத்து 65 ஆயிரத்து 121 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர். மொத்தம் அந்த ஆண்டில் 2 கோடியே 47 லட்சத்து 81 ஆயிரத்து 936 பேர் வந்துள்ளனர். 2919ம் ஆண்டு 3 கோடியே 65 லட்சத்து 57 ஆயிரத்து 527 உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளும், 2 லட்சத்து 52 ஆயிரத்து 947 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உள்பட மொத்தம் அந்த ஆண்டு 3 கோடியே 68 லட்சத்து 10 ஆயிரத்து 714 பேர் வந்துள்ளனர்.

2020ம் ஆண்டு ஒரு கோடியே 38 லட்சத்து 77 ஆயிரத்து 585 உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள், 81 ஆயிரத்து 20 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உள்பட மொத்தம் 1 கோடியே 39 ஆயிரத்து 58 ஆயிரத்து 605 பேர் மதுரைக்கு சுற்றுலா வந்துள்ளனர். 2021ம் ஆண்டில் 99 லட்சத்து 33 ஆயிரத்து 666 உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள், வெறும் 195 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உள்பட அந்த ஆண்டு 99 லட்சத்து 33 ஆயிரத்து 861 பேர் வந்துள்ளனர். 2022ம் ஆண்டில் 1 கோடியே 58 லட்சத்து 39 ஆயிரத்து 414 உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள், 16 ஆயிரத்து 637 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உள்பட அந்த ஆண்டு 1 கோடியே 58 லட்சத்து 56 ஆயிரத்து 51 பேர் வந்துள்ளனர்.

2023 இந்த ஆண்டில் இதுவரை 1 கோடியே 16 லட்சத்து 28 ஆயிரத்து 92 உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள், 26 ஆயிரத்து 154 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உள்பட ஒரு கோடியே 16 லட்சத்து 54 ஆயிரத்து 246 பேர் இந்த ஆண்டு வந்துள்ளனர். தற்போது படிபடியாக சுற்றுலாத்துறை பாதிப்பில் மீளத் தொடங்கியுள்ளது'' என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in