

ஆடி மாதம் மற்றும் அண்டை மாநிலங்களில் மீன்பிடி தடை ஆகிய காரணங்களால் மீன்களின் விலை அதிகரித்துள்ளது. கிலோ ரூ.400-க்கு விற்கப்பட்ட வஞ்சிரம், தற்போது ரூ.900 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் மீன்பிடி தடை காலம் நீங்கியதையடுத்து, கடந்த ஒரு மாதமாக மீன்களின் விலை குறைந்திருந்தது. இந்நிலையில், தற்போது மீண்டும் விலை அதிகரித் துள்ளது. இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட பாரம்பரிய ஐக்கிய மீனவர் சங்க பொதுச் செயலாளர் மகேந் திரன், ‘தி இந்து’விடம் கூறியதாவது:
ஆடி மாதத்தில் அம்மன் கோயில்களில் மட்டுமின்றி வீடுகளிலும் கூழ்வார்த்தல் நிகழ்ச்சி நடக்கும். வீடுகளில் அம்மனுக்கு வைக்கப்படும் படையலில் அசைவம் பிரதானமாக இடம் பெற்றி ருக்கும். அதிலும், குறிப்பாக மீன் உணவு அதிகளவில் இருக்கும். இதன்காரணமாக, ஆடி மாதத்தில் மீன்களின் தேவை அதிகரிக்கும்.
அண்டை மாநிலங்களான கேரளம், கர்நாடகத்தில் இருந்து தமிழகத்துக்கு அதிகளவில் மீன்கள் வரும். தற்போது அங்கு மீன்பிடி தடை காலம் அமலில் உள்ளதால் வரத்து குறைந்துள்ளது. இந்த இரண்டு காரணங்களால் மீன்களின் விலை அதிகரித்துள்ளது.
ஒரு கிலோ ரூ.400-க்கு விற்கப் பட்ட வஞ்சிரம் மீன், தற்போது ரூ.750 முதல் ரூ.900 வரை விற்பனை யாகிறது. ரூ.120-க்கு விற்ற ‘ஷீலா’, ரூ.300 ஆகவும், ரூ.200-க்கு விற்ற சங்கரா, ரூ.300 ஆகவும் அதிகரித்துள்ளது. இறால் கிலோ ரூ.350-ல் இருந்து ரூ.550-க்கும், வவ்வால் ரூ.300-ல் இருந்து ரூ.450 முதல் ரூ.500 வரைக்கும் விலை உயர்ந்துள்ளது.
கேரளம், கர்நாடகத்தில் ஆக. 31-ம் தேதியுடன் மீன்பிடி தடை காலம் முடிகிறது. அதன்பிறகே மீன்களின் வரத்து அதிகரித்து விலை குறையும். இவ்வாறு மகேந்திரன் கூறினார்.