Published : 10 Aug 2023 06:15 AM
Last Updated : 10 Aug 2023 06:15 AM

அரசு நில அபகரிப்புக்கு துணைபோகும் அதிகாரிகள் மீது குற்றவியல் நடவடிக்கை - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: அரசு புறம்போக்கு நிலங்களை தனிநபர்கள் சொந்தம் கொண்டாட துணைபோகும் அதிகாரிகள் மீது குற்றவியல் ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக சென்னை கீழ்கட்டளையை சேர்ந்த பதம்சந்த் ஜெயின், சுனிதா ஜெயின், நீரஜ்ஜெயின் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல்செய்த மனு:

பல்லாவரம் தாலுகாவில் உள்ள கீழ்கட்டளை எம்.கே. நகர் 1-வது தெருவில் எங்களுக்கு சொந்தமான நிலம் உள்ளது. இந்தஇடம் ரயத்வாரி புஞ்சை என கிராமபதிவேடுகளில் வகைப்படுத்தப் பட்டுள்ளது. ஆனால், வருவாய் துறை ஆவணங்களில் இந்த இடம்ஏரி புறம்போக்கு என வகைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், நீர்ப்பிடிப்பு பகுதிக்குள் வருவதால் தடையில்லா சான்று வழங்க முடியாது என்றும் நீர்வள ஆதாரத் துறை அதிகாரிகள் கடந்த பிப்.6-ம் தேதி உத்தரவிட்டுள்ளனர். அந்த உத்தரவை ரத்து செய்து, எங்கள் நிலத்தை வீட்டுமனை பகுதியாக மாற்ற உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கோரியிருந்தனர்.

நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு இந்த வழக்கு விசாரணை நடந்தது. அப்போது அரசு தரப்பில் வழக்கறிஞர் இ.சுந்தரம் ஆஜராகி, மனுதாரர்கள் வசம் உள்ள இடத்தை ஆய்வு செய்தபோது அந்த நிலம் நீர்நிலை பகுதிக்குள் வருவதால் தடையில்லா சான்று வழங்க இயலாது என்றார்.

அதற்கு, நீர்நிலையின் அருகில் இருப்பதால் நீர்ப்பிடிப்பு பகுதி என அதிகாரிகள் தரப்பில் கூறுவதாக மனுதாரர்கள் தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, நீதிபதி சுப்பிரமணியம் பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது: வருவாய், நீர்வளத் துறை அதிகாரிகள் ஒருங்கிணைந்து, நீர்நிலைகள், அரசு புறம்போக்கு நிலங்களை கண்டறிந்து வரையறை செய்ய வேண்டும். வீட்டுமனைகளின் விலை விண்ணைதொடும் அளவுக்கு சென்றுவிட்டதால், பேராசைக்காரர்கள் தங்கள்சுயநலனுக்காக நீர்நிலைகளையும் விட்டுவைப்பது இல்லை. சட்டவிரோதமாக போலி ஆவணம் மூலம் அரசு நிலங்களை மாற்றி சொந்தம் கொண்டாடுகின்றனர்.

அதிகாரிகளும் எவ்வித விசாரணையும் இல்லாமல், அரசு புறம்போக்கு நிலங்கள், நீர்நிலை பகுதிகளுக்கு தடையில்லா சான்று கொடுத்து விடுகின்றனர். இந்த நடைமுறை ஏற்புடையது அல்ல. எனவே, அரசு புறம்போக்கு நிலங்களை தனிநபர்கள் சொந்தம் கொண்டாட துணைபோகும் அதிகாரிகள் மீது குற்றவியல் ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மனுதாரர் இந்த நிலம் தனக்கு சொந்தமானது என்பதற்கு ஆதரவாக எந்த ஒரு ஆதாரத்தையும் சமர்ப்பிக்கவில்லை. எனவே, அவர்கள் கோரும் நிவாரணத்தை அளிக்க முடியாது. மாவட்ட ஆட்சியர் இந்த நிலத்தை ஆய்வு செய்து, நீர்நிலையாக இருந்தால், அதில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x