Published : 10 Aug 2023 06:24 AM
Last Updated : 10 Aug 2023 06:24 AM
சென்னை: சுதந்திர தின விழாவை முன்னிட்டு, தமிழகத்தில் முக்கிய ரயில் நிலையங்களில் ஆக.13-ம் தேதி முதல் 15-ம் தேதிவரை 3 நாட்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என்று தமிழக ரயில்வே காவல்துறை கூடுதல் டிஜிபி வனிதா தெரிவித்தார்.
விழிப்புணர்வு குறும்படம்: சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்தில் ரயில் விபத்துகளைத் தடுப்பது தொடர்பாக விழிப்புணர்வு குறும்படத்தை தமிழக ரயில்வே காவல்துறை கூடுதல் டிஜிபி வனிதா வெளியிட்டார். நிகழ்ச்சியில், திரைப்பட நடிகர்கள் ஆர்த்தி மற்றும் அவரது கணவர் கணேஷ் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் ரயில்வே காவல்துறை கூடுதல் டிஜிபி வனிதா கூறியதாவது: விபத்துகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், காணொலி ஒன்றுவெளியிட்டோம். பெரும்பாலான மரணங்கள் மக்களின்அஜாக்கிரதையான செயல்களால் நடைபெறுகின்றன.
கவனக்குறைவால் மரணங்கள்: ரயில் நிலையங்களில் நடை மேம்பாலத்தை யாரும் பயன்படுத்துவதில்லை, பாதுகாப்பாக யாரும் இருப்பதில்லை. ஒரு அவசரத்தினால் உங்கள் உயிர் போனால் உங்கள் குடும்பத்துக்கு என்ன ஒரு இழப்பு ஏற்படும் என்பதை இந்த குறும்படம் மூலம் நாங்கள் சுட்டிக்காட்டி உள்ளோம்
மக்கள் செல்போனை பயன்படுத்தாமல், நிதானமாக சென்றாலே ஒரு நாளைக்கு 6 மரணங்களை குறைக்கலாம் என்பது எனது கணிப்பு. பெரும்பாலும் கவனக்குறைவால் மரணங்கள் ஏற்படுகின்றன.
சுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னை, திருச்சிராப்பள்ளி, மதுரை, திருநெல்வேலி, சேலம், கோவை உள்ளிட்ட முக்கிய ரயில்நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்படும். ரயில் நிலையங்களில், வரும் 13-ம் தேதி முதல் 15-ம் தேதிவரை 3 நாட்களுக்கு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT