

ஈரோடு: ஈரோட்டைச் சேர்ந்த கல்வெட்டு அறிஞர் புலவர் செ.ராசு உடல்நலக் குறைவால் காலமானார்.
ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே வெள்ளமுத்துக் கவுண்டன்வலசு கிராமத்தில் பிறந்தவர் புலவர் செ.ராசு (85). பள்ளிக் கல்வியை திருப்பூர், ஈரோடு மாவட்டங்களிலும், திருப்பனந்தாள் கல்லூரியில் வித்துவான் படிப்பையும் நிறைவுசெய்தார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் பி.லிட் மற்றும் முதுகலைப் பட்டம் பெற்றார்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் கொங்கு நாட்டு வரலாற்றில் சமண சமயம் என்னும் தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர். 1959 -ல் ஈரோட்டில் தமிழாசிரியர் பணியைத் தொடங்கினார். 1980-82-ல் தமிழக அரசு தொல்லியல் துறையில் பணிபுரிந்தார்.
பிறகு தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக 1982-ல் இணைந்து கல்வெட்டு, தொல்லியல் துறை தலைவராக பணியாற்றி ஓய்வுபெற்றார்.
கடந்த 50 ஆண்டுகளாகக் கல்வெட்டு, செப்பேடு, ஓலைப் பட்டயம், ஓலைச்சுவடி, இலக்கியம் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டவர். மேலும், 161 நூல்கள் மற்றும் 250 கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். 1,800 ஆண்டுகளுக்கு முற்பட்ட அறச்சலூர் இசைக் கல்வெட்டைக் கண்டுபிடித்து உலகுக்கு வெளிப்படுத்தியவர்.
சங்க கால கொடுமணம் (இன்றைய கொடுமணல்) ஊரைக் கண்டறிந்து, அகழாய்வு செய்து ரோமானியர்களுடன் தொடர்புடைய நொய்யல் கரை நாகரிகம் குறித்த அரிய தகவல்களை வெளிக்கொண்டு வந்துள்ளார். இந்நிலையில், உடல்நலக்குறைவால் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர், நேற்று காலை காலமானார்.
மறைந்த புலவர் செ.ராசுவின் உடலுக்கு, ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா, முன்னாள் மத்திய அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன், முன்னாள் அமைச்சர் கே.வி. இராமலிங்கம், அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள், தமிழறிஞர்கள் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர்.
பெருந்துறை மின் மயானத்தில் நேற்று மாலை இறுதிச்சடங்கு நடந்தது. மறைந்த புலவர் ராசுவுக்கு, மனைவி கவுரி அம்மாள் மற்றும் 3 மகன்கள் உள்ளனர்.
புலவர் செ.ராசு மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், பல கல்வெட்டுக்கள், செப்பேடுகள், சுவடிகளை பதிப்பித்துத் தமிழுக்குப் பெருந்தொண்டாற்றிய அவரது மறைவு தமிழ் ஆய்வுலகத்துக்குப் பேரிழப்பாகும் என கூறியுள்ளார்.
இதேபோன்று, அமைச்சர் மு.பெசாமிநாதன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, கொமதேக பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.