Published : 09 Nov 2017 08:40 AM
Last Updated : 09 Nov 2017 08:40 AM

கடலில் கச்சா எண்ணெய் கசிவை ஏற்படுத்திய கப்பல் விபத்துக்கு மனித தவறுகளே முக்கிய காரணம்: மத்திய கப்பல் போக்குவரத்து இயக்குநரகம் விளக்கம்

எண்ணூர் துறைமுகம் அருகே கடலில் கச்சா எண்ணெய் கசிவை ஏற்படுத்திய கப்பல் விபத்துக்கு மனித தவறுகளே முக்கிய காரணம் என்று மத்திய கப்பல் போக்குவரத்து இயக்குநரகம், தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்துள்ள விசாரணை அறிக்கையில் தெரிவித்துள்ளது.

எண்ணூர் துறைமுகம் அருகே கடலில் கச்சா எண்ணெய் கசிவை ஏற்படுத்திய கப்பல் விபத்து தொடர்பாக சென்னையைச் சேர்ந்த கே.ஆர்.செல்வராஜ் குமார், மீனவர் நலச்சங்கத் தலைவர் எம்.ஆர்.தியாகராஜன் ஆகியோர் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென் மண்டல அமர்வில் ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவில், “எண்ணூர் துறைமுகம் அருகே ஏற்பட்ட கப்பல் விபத்தால் சென்னை கடலோரப் பகுதியில் ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் பாதிப்புகளை சரி செய்ய வேண்டும். வாழ்வாதாரத்தை இழந்த மீனவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்” என்று கோரியிருந்தனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் எனக் கோரி மற்றொரு மனுவையும் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுக்கள், அமர்வின் நீதித்துறை உறுப்பினர் நீதிபதி எம்.எஸ்.நம்பியார், தொழில்நுட்ப உறுப்பினர் பி.எஸ்.ராவ் ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய கப்பல் போக்குவரத்து இயக்குநரகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட, கப்பல் விபத்து தொடர்பான விசாரணை அறிக்கையில் கூறியிருப்ப தாவது:

இரு கப்பல்களிலும் ‘அவுட்லுக்’ எனப்படும் கடலில் ஏற்படும் அபாயங்கள் மற்றும் எதிரில் வரும் கப்பல்களை கண்காணிக்கும் வசதிகள் முறையாக இல்லை. ‘அவுட்லுக்’ பணியில், அனுபவம் இல்லாத பயிற்சி பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். அவர்களுக்கு வேறு பணிகளும் கூடுதலாக கொடுக்கப்பட்டிருந்தன. நங்கூரத்தை பயன்படுத்தி மோதிக்கொள்வதை தடுக்கும் வாய்ப்பை இரு கப்பல்களும் தவற விட்டுள்ளன. கப்பல்களை இயக்கியவர்களும், ‘அவுட்லுக்’ பணியில் ஈடுபட்டவர்களும், அருகில் வேறு கப்பல் வருவதை, கப்பலின் தலைமை அதிகாரிக்கு தெரிவிக்கவில்லை. எண்ணெய் கசிவு ஏற்பட்டபோது, கப்பலின் அதிகாரிகள், முதலில் 2 டன் எண்ணெய் மட்டுமே கசிந்ததாக தவறாக மதிப்பிட்டுவிட்டனர். கடலில் கசிந்த எண்ணெயின் அளவை மதிப்பிடுவதிலும் கவனக்குறைவு இருந்துள்ளது. எனவே இந்த கப்பல் விபத்துக்கு மனிதத் தவறுகளே முக்கிய காரணமாக உள்ளது. இவ்வாறு விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் ஆஜராகி, கப்பல் நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்ட நிவாரணத் தொகையை, உடனடியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டும் என்றார். அதற்கு பதிலளித்த அரசுத் தரப்பு வழக்கறிஞர், உண்மையான பயனாளிகளை கண்டறிய அவகாசம் தேவைப்படுகிறது என்றார். அதன் பின்னர், நிவாரணம் வழங்க தாமதம் ஆவது தொடர்பாக மீன் வளத்துறை 2 வாரங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று அமர்வின் உறுப்பினர்கள் உத்தரவிட்டனர். விசாரணை டிசம்பர் 14-க்கு தள்ளிவைக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x