

சேலம்: பழங்குடி மக்களின் நிலத்தை, இதர மக்கள் வாங்குவதை தடை செய்ய மாநில அரசு சட்டம் கொண்டு வர வேண்டும், என சேலத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான பழங்குடியினர் வாழ்வாதார மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சர்வதேச பழங்குடியினர் தினத்தையொட்டி, மாவட்ட அளவிலான பழங்குடியினர் வாழ்வாதார மாநாடு சேலத்தில் நேற்று நடைபெற்றது. கிராம சீரமைப்பு மற்றும் வளர்ச்சித் திட்டம் இயக்குநர் ரெங்கநாதன் தலைமை வகித்தார். சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் மாநாட்டை தொடங்கி வைத்தார்.
பழங்குடியினர் நலத்துறை சேலம் மாவட்ட திட்ட அலுவலர் ராஜேந்திரன், தமிழக ஆதிவாசி அமைப்புகளின் கூட்டமைப்பு மாநிலத் தலைவர் வெங்கடேசன் மற்றும் பல்வேறு பழங்குடியினர் நலச் சங்கங்களின் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பேசினர்.
மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: நிலுவையில் உள்ள அனைத்து வன உரிமை மனுக்களுக்கும் பட்டா வழங்க வேண்டும். வன கிராமங்களை, வருவாய் கிராமங்களாக மாற்ற வேண்டும். இருளர் இன மக்களுக்கு, வீட்டுமனை, தரமான வீடு கட்டித் தர வேண்டும். மலைப் பகுதிகளில், தரிசு நிலங்களில் பயிர் செய்யும் பழங்குடி மக்களுக்கு, அரசாணை 1168-ல் இருந்து விலக்களித்து பட்டா வழங்க வேண்டும்.
பழங்குடி மக்களின் நிலத்தை, இதர மக்கள் வாங்குவதை தடை செய்ய மாநில அரசு சட்டம் கொண்டு வர வேண்டும். பழங்குடி மக்களுக்கு ஒதுக்கப்படும் நிதியை, வேறு பணிகளுக்கு மாற்றப்படுவதை தடுக்க, ஆந்திர மாநிலம் போல, இங்கும் சட்டம் கொண்டு வர வேண்டும். தமிழக அரசு வனங்களில், ஆடு, மாடு மேய்க்கக் கூடாது என்ற சென்னை உயர் நீதிமன்ற உத்தரவில் தலையீடு செய்து, மேய்ச்சல் உரிமையை பழங்குடி மக்களுக்கு பெற்றுத் தர வேண்டும்.
பச்சைமலை, கொல்லிமலை போன்ற பகுதிகளில் பழங்குடி மக்களின் 8,943,81 ஏக்கர் நிலம் போலி பத்திரம் செய்யப்பட்டுள்ளது. எனவே, சேலம், நாமக்கல், திருச்சி மாவட்ட நிர்வாகங்கள், போலி பத்திரப் பதிவுகளை ரத்து செய்து, அதற்கு துணை போன அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.