Published : 10 Aug 2023 06:20 AM
Last Updated : 10 Aug 2023 06:20 AM
சென்னை: தமிழக சுகாதாரத் துறையின் மூலம் திருவல்லிக்கேணி அரசு கஸ்தூரிபா காந்தி மருத்துவமனை, எழும்பூர் அரசு பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் 29 மேகாலயா மருத்துவர்களுக்கு, உயிர் காக்கும் மயக்க மருத்துவம், பேறுகால அவசர சிகிச்சை மற்றும் அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் ஆகியவற்றில் 6 மாத பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்நிலையில், திருவல்லிக்கேணி அரசு கஸ்தூரிபா காந்தி மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பயிற்சியை நிறைவு செய்த29 மருத்துவர்களுக்கான சான்றிதழ்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று வழங்கினார்.
மேகாலயா மாநில சுகாதாரத் துறை அமைச்சர் மேசல் அம்பரீன் லிங்டோ, செயலர் சம்பத்குமார், ஆணையர் ஜோரம் பேடா, இயக்குநர் லிண்டம், தமிழக சுகாதாரத் துறைச் செயலர் ககன்தீப் சிங் பேடி,தேசிய நலவாழ்வுக் குழும இயக்குநர் ஷில்பா பிரபாகர் சதிஷ், தமிழக மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் இரா.சாந்திமலர், அரசு கஸ்தூரிபா காந்தி தாய் சேய் நல மருத்துவமனை இயக்குநர் சுமதி உடனிருந்தனர்.
பின்னர், அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 2 ஆண்டுகளுக்கு முன்பு குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற அகில இந்திய சுகாதாரத் துறை அமைச்சர்களுடனான மாநாட்டில், மேகாலயா மாநிலத்தின் சுகாதாரத் துறை அலுவலர்களுடனான சந்திப்பின்போது, இரு மாநில மருத்துவர்களுக்கு இடையேயான மருத்துவப் பயிற்சி மேற்கொள்வது தொடர்பாக விவாதிக்கப்பட்டது.
தமிழக முதல்வரின் வழிகாட்டுதலின்படி, 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மேகாலாயா அரசு மருத்துவர்களின் பயிற்சிக்கு, தமிழக அரசுடன் மேகாலாயா அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது.
திருவல்லிக்கேணி அரசு கஸ்தூரிபா காந்தி மருத்துவமனை, எழும்பூர் அரசு பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் பயிற்சிகள் அளிக்கப்பட்டன. பயிற்சிகள் முடிக்கப்பட்ட 29 மேகாலயா மருத்துவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வேறொரு மாநில மருத்துவர்களுக்குப் பயிற்சி அளிப்பது இதுவே முதல்முறை ஆகும். தேசிய அளவில் மேகாலயா மாநிலத்தில் மகப்பேறு இறப்பு சதவீதம் மற்றும் பச்சிளம் குழந்தை இறப்பு சதவீதம் குறைவதற்கு, தமிழக அரசின் பங்களிப்பாக இந்தபயிற்சி உதவும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT