Published : 10 Aug 2023 06:20 AM
Last Updated : 10 Aug 2023 06:20 AM
மாமல்லபுரம்: மாமல்லபுரத்தை அடுத்த பேரூர் கிராமப்பகுதியில் ரூ.4 ஆயிரத்து 276 கோடி மதிப்பில் கடல்நீரை குடிநீராக்கும் தொழிற்சாலை அமைய உள்ள பகுதியில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் முன்னிலையில், நகராட்சி நிர்வாகங்கள் துறை அமைச்சர் கே.என்.நேரு பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தை அடுத்த நெம்மேலி பகுதியில் கடல் நீரை குடிநீராக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு, நாள்தோறும் 100 மில்லியன் லிட்டர் கடல் நீர் சுத்திகரிக்கப்பட்டு குடிநீராக தென் சென்னை பகுதிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக தமிழக அரசு ரூ.1,259 கோடி மதிப்பில் நாளொன்றுக்கு 150 மில்லியன் லிட்டர் கடல்நீரை, குடிநீராக்கும் சுத்திகரிப்பு ஆலை அமைக்கும் பணிகள் கடந்த 2019-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
இப்பணிகள், 2021-ம் ஆண்டில் நிறைவு பெற்று, குடிநீர் ஆலை செயல்பாட்டுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கரோனா பரவலை தடுப்பதற்கான ஊரடங்கு உத்தரவால், கட்டுமான பணிகளில் தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து, புதிய குடிநீர் ஆலையின் கட்டுமான பணிகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
இந்நிலையில், சென்னை பெருநகர குடிநீர் வாரியம் சார்பில் பேரூர் பகுதியில் ஆசியாவிலேயே பெரியளவிலான 400 மில்லியன் லிட்டர் கடல்நீரை சுத்திகரிக்கப்பட்டு, குடிநீர் வழங்குவதற்கான பணிகள் நடைபெற உள்ளன. இதற்காக, ரூ.4 ஆயிரத்து 276 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான கட்டுமான பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் தொடங்கி வைக்க உள்ளார்.
இந்நிலையில், புதிதாக அமைக்கப்பட உள்ள கடல்நீரை குடிநீராக்கும் ஆலையின் கட்டுமான பணிகள் குறித்து அமைச்சர் கே.என்.நேரு பார்வையிட்டு நேற்று ஆய்வு செய்தார். மேலும், ஏற்கெனவே அமைக்கப்பட்டு வரும் குடிநீர் ஆலையின் பணிகள் குறித்தும், முதல்வர் திறப்பு விழாவின்போது மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்தும் அதிகாரிகளிடம் ஆலோசித்தார்.
இந்நிகழ்ச்சியில், அமைச்சர் தா.மோ.அன்பரசன், மாவட்ட ஆட்சியர் ஆ.ர.ராகுல்நாத், எஸ்பி சாய்பிரனீத், டிஎஸ்பி ஜகதீஸ்வரன், எம்எல்ஏ பாலாஜி, பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள் உட்பட பலர் உடனிருந்தனர்.
பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் கே.என். நேரு பேசியதாவது: மாமல்லபுரத்தை அடுத்த நெம்மேலி அருகேயுள்ள பேரூர் கிராமப் பகுதியில் புதிதாக கடல் நீரை குடிநீராக்கும் தொழிற்சாலையின் கட்டுமான பணிகளை விரைவில் முதல்வர் தொடங்கி வைப்பார். ரூ.4 ஆயிரத்து 276 கோடி மதிப்பில் தொடங்க உள்ள இப்பணிகள் மூலம், 23 லட்சம் பொதுமக்கள் பயனடைவார்கள். நாள் ஒன்றுக்கும் 400 மில்லியன் குடிநீர் விநியோகம் செய்யப்பட உள்ளது. 48 கி.மீ. தொலைவுக்கு குழாய்கள் அமைக்கபட உள்ளன. இவ்வாறு அமைச்சர் கே.என். நேரு கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT