Published : 10 Aug 2023 06:11 AM
Last Updated : 10 Aug 2023 06:11 AM
சென்னை: சுகாதாரத் துறை அமைச்சரின் நேர்முக உதவியாளருக்கு பதவி உயர்வு வழங்க ஏதுவாக சக அதிகாரிக்கு வழங்கப்பட்ட சார்ஜ் மெமோவை ரத்து செய்துள்ள உயர் நீதிமன்றம், அந்த அதிகாரிக்கு துணை இயக்குநராக பதவி உயர்வு வழங்க உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் சுகாதாரத் துறையில் அதிகாரியாக பணிபுரியும் ஆனந்தஜோதி தாக்கல் செய்திருந்த மனுவில், ‘‘ தமிழக மருத்துவத் துறையில் 29 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறேன். நிர்வாக பிரிவு துணை இயக்குநர் பதவி உயர்வுக்கான பணிமூப்பு பட்டியலில் எனது பெயர் முதலிடத்திலும், அதன்பிறகு பிரபு ராம் என்பவர் இரண்டாமிடத்திலும், ரமேஷ்குமார் மூன்றாவது இடத்திலும் இருந்தனர்.
தமிழக சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரின் மூத்த நேர்முக உதவியாளராக ரமேஷ்குமார் பணியாற்றியதால், அவருக்கு அந்த பதவி உயர்வை வழங்குவதற்காக எனக்கு திடீரென சார்ஜ் மெமோ வழங்கப்பட்டது. அதில், விழுப்புரத்தில் 2 சமையலர்களை பணி நியமனம் செய்ததில் அரசு விதிகளை முறையாக பின்பற்றவில்லை என என் மீது குற்றம் சாட்டப்பட்டது.
மொட்டை கடிதம் வடிவில் வந்த அந்த புகார் பொய்யானது என விசாரணையில் தெரியவந்தது. அதே குற்றச்சாட்டை சுமதி என்பவர் அளித்துள்ளதாக கூறி, எனக்கு சார்ஜ் மெமோ வழங்கியுள்ளனர். எனவே அதை ரத்து செய்து, எனக்கு உரிய பதவி உயர்வு வழங்க வேண்டும்” என கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பாக விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் நீதிபதி பிறப்பித்துள்ள உத்தரவில், ‘‘பொதுவாக இதுபோன்ற சார்ஜ் மெமோ விவகாரங்களில் நீதிமன்றம் தலையீடு செய்வதில்லை. ஆனால் வேறு ஏதோ ஒரு உள்நோக்கத்துடன் தவறு செய்யாத ஒருவருக்கு குற்றச்சாட்டு குறிப்பாணை வழங்கப்பட்டால், அதில் நீதிமன்றம் தலையிட அரசியலமைப்பு சட்டம் அதிகாரம் வழங்கியுள்ளது.
திருத்திய பணி மூப்பு பட்டியல் தயாரிக்கப்பட்டு, அதற்கு ஆட்சேபம் தெரிவிப்பவர்கள் 2 மாதங்களுக்குள் தெரிவிக்கலாம் என அறிவித்த அதே நாளில், ஏற்கெனவே 3-வது இடத்தில் இருந்த ரமேஷ்குமாருக்கு துணை இயக்குநராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
இதில் அவசரம் காட்டப்பட்டு இருப்பது அப்பட்டமாக தெரிகிறது. எனவே மனுதாரருக்கு கடந்த பிப்ரவரி மாதம் வழங்கப்பட்ட சார்ஜ் மெமோ ரத்து செய்யப்படுகிறது. அவருக்கு பணி மூப்பு அடிப்படையில் துணை இயக்குநராக பதவி உயர்வு வழங்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT