Published : 10 Aug 2023 06:15 AM
Last Updated : 10 Aug 2023 06:15 AM
சென்னை: அண்ணா நகர் ரவுண்டானாவுக்கு சாதாரண கட்டண நகரப் பேருந்துகளை போதிய அளவில் இயக்க வேண்டும் என உங்கள் குரல் சேவை வழியாக வாசகர் ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னையில் மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் நகரம் மற்றும் புறநகர் பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் உள்ள 31 பணிமனைகள் வாயிலாக 3,233 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
அதன்படி சென்னை முழுமைக்கும் சுமார் 629 வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் சாதாரண கட்டணப் பேருந்துகளாகும். இதில், பெண்கள், திருநங்கைகள், மாற்றுத் திறனாளிகளுக்கு கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த வகை பேருந்துகளை அண்ணா நகர் ரவுண்டானா பகுதியில் போதிய அளவில் இயக்க வேண்டும் என 'இந்து தமிழ் திசை' நாளிதழின் 'உங்கள் குரல்' சேவையைத் தொடர்பு கொண்டு அண்ணாநகரைச் சேர்ந்த கு.வசந்த் கலாநிதி கூறியதாவது:
அண்ணாநகர் ரவுண்டானா பகுதியில் விரைவு, சொகுசு பேருந்துகளே அதிகளவில் இயக்கப்படுகின்றன. அதிலும், பீக் ஹவர்ஸ் எனப்படும் அலுவலக நேரத்தில் கூடகட் சர்வீஸ் பேருந்துகளே அதிகளவில் இயக்கப்படுகின்றன. குறிப்பாக 7எம், 7எச், 7 எம் போன்றவை கட் சர்வீஸாக டவுட்டன் வரை இயங்குவதால் பொதுமக்களுக்கு பயனில்லாமல் இருக்கிறது. அந்த பேருந்துகளை சென்ட்ரல், பாரிமுனை வரைஇயக்கினால் கூட மக்கள் பயன்பெறுவர்.
மேலும் சாதாரண கட்டண நகர பேருந்துகளை இயக்கும்போது பொருளாதார ரீதியில் அப்பகுதி மக்களுக்கு பெருமளவு பயனளிக்கும். இதுதொடர்பாக பல முறை மாநகர போக்குவரத்துக் கழகத்தின் புகார் எண்ணில் தொடர்பு கொண்டால், பேருந்துகள் அப்படித்தான் இயங்கும் என தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அண்ணாநகர் ரவுண்டானாவில் அனைத்து பயணிகளும் பயன்பெறும் வகையில் சாதாரண கட்டண பேருந்துகளை போதுமான எண்ணிக்கையில் இயக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக மாநகர போக்குவரத்துக் கழக உயரதிகாரிகளிடம் கேட்டபோது, "அண்ணாநகர் ரவுண்டாணா பகுதிக்கு போதிய அளவில் சாதாரண கட்டண நகர பேருந்துகள் இயக்கப்படுகின்றன. குறிப்பாக 40 எல், 147 சி, 7 எச், 147 பி, 147 ஏ போன்ற வழித்தட எண் கொண்ட பேருந்துகள் அதிகளவில் சாதாரண கட்டண பேருந்துகளாகவே இயக்கப்படுகின்றன.
மக்களின் தேவை கருதி அவ்வப்போது கட் சர்வீஸ் பேருந்துகள் இயக்கப்படும். அதேநேரம், அண்மையில் பேருந்துகள் முழு நடையையும் பூர்த்தி செய்ய வேண்டும் என மாநகர போக்குவரத்துக் கழகதலைமையகத்தில் இருந்து ஓட்டுநர், நடத்துநர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT